சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை- ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
சிறுமிக்கு தொல்லை
சத்தியமங்கலம் பனையம்பள்ளி சொலவனூர் அரசாணிமொக்கை பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 37). கூலித்தொழிலாளி. கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி குமார், 6 வயதான ஒரு சிறுமியை வலுக்கட்டாயமாக வீட்டிற்குள் அழைத்து சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். அப்போது சிறுமி பயத்தில் கூச்சலிட்டார். எனவே அவரை வீட்டுக்கு வெளியே அனுப்பி விட்டார். பின்னர், அந்த சிறுமி நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறினார். இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் சத்தியமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், விசாரணை நடத்திய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தனர்.
தொழிலாளிக்கு சிறை
மேலும் இதுதொடர்பாக ஈரோடு மகளிர் கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி மாலதி விசாரணை நடத்தி நேற்று தீர்ப்பு கூறினார். அதில் குற்றம்சாட்டப்பட்ட தொழிலாளி குமாருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவித்தொகை வழங்கவும் தமிழக அரசுக்கு நீதிபதி மாலதி பரிந்துரை செய்து உள்ளார். இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் ஜெயந்தி ஆஜரானார்.