மாணவிக்கு பாலியல் தொல்லை: அரசு மருத்துவ கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடை நீக்கம்


மாணவிக்கு பாலியல் தொல்லை: அரசு மருத்துவ கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடை நீக்கம்
x

அரசு மருத்துவ கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவி பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தர்மபுரி,

தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் சட்டம் சார்ந்த மருத்துவ பிரிவில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தவர் டாக்டர் சதீஷ்குமார். இவர் மருத்துவ கல்லூரி வளாகத்தில் 2-ம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

இது குறித்து அந்த மாணவி தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் அமுதவல்லியிடம் புகார் அளித்தார். இதுதொடர்பாக விசாரணை குழு அலுவலர்கள் உதவி பேராசிரியர் சதீஷ்குமாரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது மாணவி அளித்த புகாரில் முகாந்திரம் இருப்பது தெரியவந்தது.

பணியிடை நீக்கம்

இந்த விசாரணை குறித்த அறிக்கை மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே உதவி பேராசிரியர் சதீஷ்குமார் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை மருத்துவ கல்வி இயக்குனரகம் பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தர்மபுரியில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின்பேரில் உதவி பேராசிரியர் சதீஷ்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதனடிப்படையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது விசாரணை அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவ பணி என்பது மக்களை காக்கும் பணி. இந்த பணியில் உள்ளவர்கள் இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபட்டால் பாரபட்சம் இன்றி அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story