மாணவிக்கு பாலியல் தொல்லை: அரசு பள்ளி ஆசிரியர் பணி இடைநீக்கம்
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியரை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் உத்தரவிட்டு உள்ளார்.
மாணவிக்கு பாலியல் தொல்லை
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள காட்டுக்கோட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருபவர் மாரிமுத்து. இவர் பள்ளி மாணவிகளிடம் தவறான அர்த்தத்தில் பேசியதாகவும், ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் புகார் எழுந்தது.
இது குறித்து மாணவியின் பெற்றோர் கலெக்டர் கார்மேகத்திடம் புகார் கொடுத்தனர். அதன்பேரில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், சமூகநல அலுவலர் ஆகியோர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். இது குறித்த அறிக்கையை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் தாக்கல் செய்தனர்.
ஆசிரியர் பணி இடைநீக்கம்
இதையடுத்து அவர் காட்டுக்கோட்டை பள்ளிக்கு நேரில் சென்று மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து பள்ளி ஆசிரிய, ஆசிரியைகளிடம் விசாரணை நடத்தினார். இந்த நிலையில் பட்டதாரி ஆசிரியர் மாரிமுத்துவை பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் உத்தரவிட்டு உள்ளார்.
இது குறித்து அவர் கூறும் போது, 'விசாரணை அறிக்கையின் படி ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது' என்றார்.