பள்ளி, கல்லூகளில் பாலியல் குற்றங்களை கட்டுப்படுத்துவது எப்படி?


பள்ளி, கல்லூகளில் பாலியல் குற்றங்களை கட்டுப்படுத்துவது எப்படி?
x

பள்ளி, கல்லூகளில் பாலியல் குற்றங்களை கட்டுப்படுத்துவது எப்படி? இதுகுறித்து பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

நாமக்கல்

காலங்கள் கடந்தபோதும், நாகரிகங்கள் வளர்ந்தபோதும் பெண்களின் மீதான வன்முறைகளும், பாலியல் தாக்குதல்களும் குறைந்தபாடில்லை.

வரதட்சணை, தொடுதல், பாலியல் வன்கொடுமை, பாலியல் வன்கொடுமைக்கான முயற்சிகள் என பெண்களின் மீதான தாக்குதல்கள் என்பது நீண்டுகொண்டே செல்கின்றன.

பள்ளிகள், கல்லூரிகள் என எங்கு சென்றாலும் சொல்ல முடியாத துயரத்தை பெண்கள் அனுபவித்து வருகிறார்கள்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான துன்புறுத்தல்கள் குறித்தான புகார்கள் அதிகரித்திருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசிய மகளிர் ஆணையம் தகவலும் தெரிவித்திருந்தது.

பாலியல் குற்றங்கள்

இந்தியாவில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க போக்சோ சட்டம் உள்ளது. 18 வயதுக்கு கீழ் உள்ள அனைத்து குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச்சட்டத்தின் வரையறைக்குள் வருவார்கள். ஆனால், பள்ளிகளில் இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாததால் பல பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும்போதும் வெளியே சொல்லப்பயப்படுகிறார்கள்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கடந்த 5 ஆண்டுகளை காட்டிலும் கணிசமாக அதிகரித்து இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பள்ளி, கல்லூரிகளில்

சமீப காலமாக பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல் குறித்த சம்பவங்களும், புகார்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. எனவே, பாலியல் துன்புறுத்தல்கள் பற்றியும், அவற்றை எவ்வாறு தடுப்பது என்பது குறித்தும் விழிப்புணர்வு சிறு வயதில் இருந்தே பெண் பிள்ளைகளிடம் ஏற்படுத்துவது அவசியம் ஆகிறது.

இதுகுறித்து பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

புகார் அளிக்க முன்வர வேண்டும்

நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் கூறியதாவது:-

பாலியல் குற்றங்களை தடுக்க பள்ளி மற்றும் கல்லூரிகளில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் காவல்துறை மூலம் நடத்தப்பட்டு தொடர்ந்து அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் மூலம் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு பாலியல் குற்றங்கள் வெகுவாக குறைந்து உள்ளன. பொதுவாக மாணவிகள் மத்தியில் சரியான புரிதல் இல்லாததே இது போன்ற பாலியல் குற்றங்கள் அதிகரிக்க காரணமாக உள்ளது. மாணவர்கள் மத்தியில் செல்போன் பயன்பாடு கடுமையாக அதிகரித்துவிட்டது.

செல்போன் மிகச் சிறந்த சாதனமாக இருந்தாலும், அதில் நல்லதும் கெட்டதும் சரிசமமாக உள்ளது. எனவே மாணவர்கள் தங்களுக்குத் தேவையானவற்றை மட்டுமே அதில் இருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். முகநூல், வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதள பயன்பாட்டை பள்ளிப்படிப்பை முடிக்கும் வரை யாவது முற்றிலும் தவிர்க்க வேண்டும். அவ்வாறு பயன்படுத்தினாலும், தனிப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் முன் பின் தெரியாதவர்களுடன் ஏற்படும் பழக்கவழக்கங்கள், தேவையற்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். மேலும் நட்பு, பகையாகும் போது அது தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. எனவே அனைத்து சூழலிலும் கவனமாக இருக்க வேண்டும். மேலும் மாணவிகள் எத்தகைய பாலியல் ரீதியான தொந்தரவுகளுக்கு ஆளானாலும், தயக்கமின்றி தைரியமாக போலீசில் புகார் அளிக்க முன்வர வேண்டும். புகார் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். முன், பின் தெரியாதவர்களிடம் சமூக வலைதளங்கள் மூலமோ அல்லது வேறு வழியிலோ பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல் இருந்தாலே பாலியல் குற்றங்கள் நிகழாது.

இவ்வாறு அவர் கூறினார்.

கடும் நடவடிக்கை

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி டீன் சாந்தா அருள்மொழி கூறியதாவது:-

பள்ளிப் பருவத்திலேயே மாணவிகளுக்கு நல்ல தொடுதல் மற்றும் கெட்ட தொடுதல் குறித்த தெளிவு கிடைப்பதற்கு ஏதுவாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் மற்றும் அத்துமீறல்களால் பாதிக்கப்படும் மாணவிகள், எவ்வித பயமின்றி துணிச்சலுடன் அதை எதிர்கொள்ள தேவையான நம்பிக்கையை மாணவிகளுக்கு ஏற்படுத்தப்பட வேண்டும். பாதிக்கப்படும் மாணவிகள் பெற்றோர்கள் அல்லது ஆசிரியர்களிடம் தயங்காமல் கூறி அத்துமீறியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

அப்போதுதான் அத்தகைய குற்றங்கள் தடுக்கப்படும். அதோடு அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாலியல் ரீதியான குற்றங்களை தடுப்பதற்காகவே ஒரு குழு அமைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் அந்த குழுவினர் குறித்த விவரங்களை அறிவிப்பு பதாகைகளில் காட்சிப்படுத்த வேண்டும்.

பெற்றோர் கண்காணிக்க வேண்டும்

நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு:-

மாணவ, மாணவிகள் சமூக வலைதளத்தில் நேரத்தை அதிகமாக செலவிடுகின்றனர். அதனால் முன்பின் தெரியாதவர்களுடன் பழக்கம் ஏற்படுகிறது. பின்னர் நாளடைவில் ஒருவரை, ஒருவர் சந்தித்துக் கொள்ள வாய்ப்பை உருவாக்கிக் கொள்கின்றனர்.

இரவு, பகலாக சமூக வலைதளத்தை பயன்படுத்தி பின்னர் பிரச்சினையில் சிக்கிக் கொள்கின்றனர். கல்வி மற்றும் ஆக்கப்பூர்வ தேவைக்கு மட்டுமே செல்போன்களை மாணவர்கள் பயன்படுத்த வேண்டும். தேவையற்ற செயலிகளை பயன்படுத்துவதில் இருந்து விலக வேண்டும்.

பெற்றோர் தொடர்ந்து தங்கள் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும். உண்மையில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மேல் உள்ள நம்பிக்கையால் அவர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கின்றனர். ஆனால் சில மாணவ, மாணவிகள் புரிந்து கொள்ளாமல் தவறான வழியில் செல்கின்றனர். அவர்கள் செய்யும் தவறை மறைத்து, பெற்றோரை ஏமாற்றுவதோடு அவர்களையும் ஏமாற்றிக் கொள்கின்றனர். இது போன்ற தேவையற்ற பழக்கவழக்கங்கள் பாலியல் ரீதியான பிரச்சினைகளில் மாணவிகள் சிக்குவதற்கு அடித்தளம் வகுக்கிறது. அதை மாணவிகள் புரிந்து கொண்டு தவிர்த்தாலே, அவர்களை தற்காத்துக் கொள்ள முடியும்.

தொடுதல் குறித்த விழிப்புணர்வு

ராசிபுரம் திருவள்ளூர் அரசு கலைக்கல்லூரி உதவி பேராசிரியர் ரம்யா மகேஸ்வரி:-

வாழ்க்கைக்கு தேவையான கல்வியை கற்பதற்கே கல்வி நிலையத்திற்கு செல்கிறோம் என்பது முதலில் மாணவ, மாணவிகள் புரிந்து கொள்ள வேண்டும். அதை உணர்ந்து மாணவிகள் தன் சக மாணவர்களுடன் ஓர் எல்லைக்குள் பழக வேண்டும். அதை விட்டு தொட்டுப் பேசுதல், தன் குடும்ப பிரச்சினைகளை கூறி ஆறுதல் தேடுதல், அதற்கான அனுதாபங்களை எதிர்பார்த்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

புகழ்ச்சிக்கு மனம் மயங்க கூடாது. ஒரு செயலை செய்வதற்கு முன் பலமுறை சிந்தித்து செயல்பட வேண்டும். பெண் குழந்தைகளுக்கு பள்ளி பருவத்திலேயே தொடுதல் குறித்த விழிப்புணர்வை தாயாரும், பெண் ஆசிரியர்களும் சொல்லிக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் பெண் குழந்தைகளுக்கு துணிச்சலும், மன உறுதியும் உண்டாகும்.

பெற்றோர்கள் தன் பிள்ளைகளை பள்ளி மற்றும் கல்லூரியில் சேர்த்த பிறகு அடிக்கடி அவர்களின் நடவடிக்கைகள் குறித்து கல்வி நிலையங்களுக்குச் சென்று அறிந்து கொள்ள வேண்டும். தினந்தோறும் தங்கள் பிள்ளைகளுடன் அன்றாட நிகழ்வுகள் குறித்து கேட்டறிந்து கலந்துரையாட வேண்டும். எந்த பிரச்சினை நடந்தாலும் நாங்கள் இருக்கிறோம் என்ற நம்பிக்கையை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story