தேனி மாவட்ட புதிய கலெக்டராக ஷஜீவனா பொறுப்பேற்பு:"பெண்கள், குழந்தைகள் நலனில் சிறப்பு கவனம் செலுத்துவேன்'' என உறுதி
தேனி மாவட்டத்தின் புதிய கலெக்டராக ஷஜீவனா பொறுப்பேற்றார். பெண்கள், குழந்தைகள் நலனில் சிறப்பு கவனம் செலுத்துவேன் என்று தெரிவித்தார்.
புதிய கலெக்டர்
தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில், விழுப்புரம் சப்-கலெக்டர் ஷஜீவனா தேனி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து தேனி மாவட்ட புதிய கலெக்டராக ஷஜீவனா நேற்று பொறுப்பு ஏற்றார். அவர் தேனி மாவட்டத்தில் 18-வது கலெக்டர் ஆவார். மேலும் மாவட்டத்தின் 2-வது பெண் கலெக்டர் ஆவார்.
மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்ற ஷஜீவனா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சிறப்பு கவனம்
சென்னையில் நடந்த புதிய மாவட்ட கலெக்டர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் முதல்-அமைச்சர் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார். களத்தில் மக்களோடு மக்களாக நின்று பணியாற்ற வேண்டும் என்றும், அரசு திட்டங்கள் அனைத்தும் மக்களை தேடிச் சென்றடைய வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் தெரிவித்தார். அதன்படி அரசு திட்டங்களில் தகுதியான யாரும் விடுபடாதவகையில் முனைப்போடு செயல்படுவேன். பெண்கள், குழந்தைகள் நலனை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் சிறப்பு கவனம் செலுத்துவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலெக்டர் ஷஜீவனா கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர். 29 ஆண்டுகளாக அரசு பணியில் உள்ளார். ஊரக வளர்ச்சி, சமூக நலத்துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகம் உள்பட பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார். அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக கல்விக் குழு உறுப்பினராக பணியாற்றினார். அரசுத் துறைகளில் சிறப்பாக பணியாற்றியதற்காக விருதுகள், கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை பெற்றுள்ளார்.