தமிழ்நாட்டின் புதிய டி.ஜி.பி.யாக சங்கர் ஜிவால் இன்று பொறுப்பு ஏற்கிறார்..!


தமிழ்நாட்டின் புதிய டி.ஜி.பி.யாக சங்கர் ஜிவால் இன்று பொறுப்பு ஏற்கிறார்..!
x

தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு இன்று (வெள்ளிக்கிழமை) ஓய்வு பெறுகிறார்.

சென்னை,

தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக கடந்த 2 ஆண்டுகள் சைலேந்திரபாபு திறம்பட பணியாற்றி வந்தார். அவர் இன்று பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். புதிய போலீஸ் டி.ஜி.பி.யாக சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டு உள்ளார். சென்னை புதிய போலீஸ் கமிஷனராக போலீஸ் அகாடமி டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் பொறுப்பு ஏற்கிறார். இதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது.

சென்னையின் 108-வது போலீஸ் கமிஷனராக 2021-ம் ஆண்டு சங்கர் ஜிவால் பதவியேற்றார். இப்பணியில் 2 ஆண்டுகள் சிறந்து விளங்கினார். சிரித்த முகத்துடன் பேசுவார். அவர் தமிழில் பேசுவதை கேட்கவே இனிதாக இருக்கும். ஆனால் பணியில் கண்டிப்பானவர். தவறு செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை பாயும்.

அதே நேரத்தில் சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு வாரந்தோறும் ரொக்க பரிசு மற்றும் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டவும் செய்வார். மாதந்தோறும் பணியில் சிறந்து விளங்கிய ஒருவரை தேர்வு செய்து அவருக்கு நட்சத்திர போலீஸ் விருதையும் வழங்கி வந்தார்.

சாதனை பயணம்

சங்கர் ஜிவால் சென்னை போலீஸ்துறையை தற்கால நவீன உலகத்துக்கு அழைத்து சென்றார். சிற்பி, அவள், பறவை, மகிழ்ச்சி, ஆனந்தம், காக்கும் காவல் கரங்கள் போன்ற சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வந்தார். சென்னையில் முத்திரை பதித்த இவர் தமிழ்நாடு முழுவதும் தனது சிறப்பு முத்திரையை தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சங்கர் ஜிவால் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். என்ஜினீயரிங் பட்டதாரி ஆவார். 1990-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக தமிழக போலீஸ் துறையில் பணியில் சேர்ந்தார். மன்னார்குடி, சேலம் ஊரகப் பகுதி போன்ற இடங்களில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார். சேலம், மதுரை உள்பட மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டாக சிறப்பாக பணியாற்றினார்.

இவர் 'கியூ' பிரிவிலும் பணியாற்றி முத்திரை பதித்தார். 2 ஆண்டுகள் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவின் தென் மண்டல இயக்குனராகவும் திறம்பட பணியாற்றியவர். அந்த கால கட்டத்தில் அதிகளவில் 'ஹெராயின்' போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. சந்தன கடத்தல் வீரப்பனை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட ஈரோடு சத்தியமங்கலம் சிறப்பு அதிரடி காவல் படையில் 6 ஆண்டுகள் பணியாற்றியவர். திருச்சி போலீஸ் கமிஷனராகவும், உளவுப்பிரிவில் டி.ஐ.ஜி., ஐ.ஜி.யாகவும் பணி செய்துள்ளார். இவரது சிறந்த காவல் பணியை பாராட்டி கவுரவிக்கும் விதமாக இவருக்கு கடந்த 2007, 2019-ம் ஆண்டுகளில் ஜனாதிபதி விருது கிடைத்துள்ளது.

இன்று பதவி ஏற்பு

தமிழ்நாட்டின் புதிய போலீஸ் டி.ஜி.பி.யாக சங்கர் ஜிவால் இன்று (வெள்ளிக்கிழமை) பதவியேற்றுக் கொள்கிறார். அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு சைலேந்திரபாபு விடை பெறுவார். இன்று மாலையில் சென்னை எழும்பூர் ராஜ ரத்தினம் விளையாட்டு மைதானத்தில் சைலேந்திரபாபுக்கு வழி அனுப்பு விழா நடைபெறுகிறது.

புதிய போலீஸ் கமிஷனர்

சென்னையின் 109-வது போலீஸ் கமிஷனராக போலீஸ் அகாடமி டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரும் இன்று பொறுப்பு ஏற்றுக் கொள்கிறார். புதிய டி.ஜி.பி. சங்கர் ஜிவாலுக்கும், புதிய போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோருக்கும் பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்த வண்ணம் உள்ளது.

தலைமைச்செயலாளர் பதவி ஏற்பு

தமிழகத்தின் 49-வது தலைமைச் செயலாளராக தற்போது நகராட்சி நிர்வாகத் துறைச் செயலாளராக உள்ள சிவ்தாஸ் மீனாவை நியமித்து, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நேற்று அறிவித்தார். இன்று பிற்பகல் 3 மணிக்கு இறையன்பு ஓய்வுபெறும் நிலையில், புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா பொறுப்பேற்கிறார்.


Next Story