சங்கராபுரம் ஊராட்சி நிர்வாக பிரச்சினை: கையெழுத்திடும் அதிகாரம் யாருக்கு? கலெக்டர் புதிய உத்தரவு


சங்கராபுரம் ஊராட்சி நிர்வாக பிரச்சினை: கையெழுத்திடும் அதிகாரம் யாருக்கு? கலெக்டர் புதிய உத்தரவு
x
தினத்தந்தி 19 Oct 2023 7:30 PM GMT (Updated: 19 Oct 2023 7:30 PM GMT)

சங்கராபுரம் ஊராட்சி நிர்வாக பிரச்சினையில் கையெழுத்திடும் அதிகாரம் யாருக்கு? என கலெக்டர் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சிவகங்கை

காரைக்குடி

ஊராட்சி நிர்வாகம் பிரச்சினை

சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சியில் தலைவர் தேவி தலைமையில் 4 உறுப்பினர்களும், துணை தலைவர் பாண்டியராஜன் தலைமையில் 11 உறுப்பினர்களும் இருபிரிவுகளாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் ஊராட்சியில் எந்த தீர்மானமும் நிறைவேற்ற இயலாத நிலையில் நிர்வாகம் முடங்கிய நிலையில் இருந்தது. சுகாதார தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காத நிலையும் காணப்பட்டது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு புகார்கள் அனுப்பப்பட்டன.

சங்கராபுரம் ஊராட்சி நிர்வாகம் சுமுகமாக நடைபெறவும், பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றவும், அரசு திட்டங்களை செயல்படுத்தவும் ஊராட்சி மன்ற துணை தலைவருக்கு வழங்கப்பட்ட 2-ம் நிலை கையெழுத்திடும் அதிகாரத்தை 2 மாதத்திற்கு நிறுத்தி வைத்து கலெக்டர் உத்தரவிட்டார். அவருக்கு பதிலாக மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அதற்கான அதிகாரம் வழங்கப்பட்டது.

வழக்கு

இந்த உத்தரவிற்கு எதிராக துணை தலைவர் பாண்டியராஜன் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து கலெக்டரின் உத்தரவிற்கு இடைக்கால தடை பெற்றார். இவ்வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் ஊராட்சி துணை தலைவரின் 2-ம் நிலை கையெழுத்திடும் அதிகாரம் 2 மாத காலத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்ட கலெக்டரின் உத்தரவு இம்மாதம் 3-ந் தேதியோடு முடிவடைந்தது.

ஆனாலும் இது குறித்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஐகோர்ட்டு கூடுதல் அட்வகேட் ஜெனரலிடம் சட்ட கருத்துரு கோரியுள்ளார். இதற்கிடையே ஊராட்சி பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் இருப்பதாலும், வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது உள்ளது.

கையெழுத்திடும் அதிகாரம்

எனவே, தமிழ்நாடு ஊராட்சிகளின் சட்ட பிரிவுகளின் படி மாவட்ட கலெக்டர், ஊராட்சி ஆய்வாளர் ஆகியோரது அவசர கால அதிகாரங்களின்படி அடிப்படை நிர்வாகங்களை செயல்படுத்த ஊராட்சி நிர்வாகத்தின் முதல் நிலை கையெழுத்திடும் அதிகாரத்தை ஊராட்சி தலைவருக்கு பதிலாக தனி அலுவலர் சாக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலருக்கும், ஊராட்சி துணை தலைவருக்கு பதிலாக 2-ம் நிலை கையெழுத்திடும் அதிகாரத்தை மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் தற்காலிகமாக அனுமதி வழங்கி கலெக்டர் ஆஷா அஜீத் உத்தரவிட்டுள்ளார்.


Next Story