கரூரில் ஷேர் ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை

கரூரில் ஷேர் ஆட்டோ டிரைவரை கல்லால் அடித்துக்கொலை ெசய்த வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஷேர் ஆட்டோ டிரைவர்கள்
கரூர் மாவட்டம், மாயனூர் அருகே உள்ள ஆர்.புதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 48). ஷேர் ஆட்டோ டிரைவர். கரூர் தாந்தோணிமலை வடக்கு தெருவை சேர்ந்தவர் கார்த்தி (28). இவரும் ஷேர் ஆட்டோ டிரைவர். இருவரும் கரூர் ராயனூர் ஷேர் ஆட்டோ நிறுத்தத்தில் இருந்து ஷேர் ஆட்டோ ஓட்டி வந்தனர்.
இந்நிலையில் ஷேர் ஆட்டோவை குறிப்பிட்ட நேரத்திற்குள் எடுத்து செல்வது தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 16-ந்தேதி மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கார்த்தி, பாஸ்கரை தகாத வார்த்தைகளால் திட்டி, கல்லால் தாக்கினார்.
கைது
இதில் காயமடைந்த பாஸ்கர் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இச்சம்பவம் தொடர்பாக தாந்தோணிமலை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாஸ்கர் நேற்றுமுன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாஸ்கரின் மனைவி கண்ணகி தாந்தோணிமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.