சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மொட்டையடிக்கும் தொழிலாளர்கள் திடீர் வேலைநிறுத்தம்


சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மொட்டையடிக்கும் தொழிலாளர்கள் திடீர் வேலைநிறுத்தம்
x

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மொட்டையடிக்கும் தொழிலாளர்கள் திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி

சமயபுரம் மாரியம்மன் .கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மொட்டையடிக்கும் பணியில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மொட்டை அடிக்க வரும் பக்தர்களிடம் தொழிலாளர்கள் பணம் கேட்பதாக புகார்கள் வந்தன.

இதைத்தொடர்ந்து கோவில் இணை ஆணையர் கல்யாணி அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தார். அதில், மொட்டையடிக்கும் தொழிலாளர்கள் பக்தர்களிடம் பணம் கேட்பது தெரிய வந்தது. மேலும், கோவிலுக்கு வந்த பக்தர்களும் இதுகுறித்து கோவில் நிர்வாகத்திடம் புகார் கொடுத்தனர்.

அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் 7 தொழிலாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், தங்களுக்கு வழங்கப்படும் சம்பளம் போதாது, சம்பளத்தை உயர்த்தி தர வேண்டும், பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்களை கடைவீதி உள்ளிட்ட இடங்களில் உள்ளவர்கள் இடைமறித்து மொட்டை அடிப்பதால் தங்களுடைய வருமானம் பாதிக்கிறது. எனவே அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று காலை 5.30 மணி முதல் 100-க்கும் மேற்பட்ட மொட்டையடிக்கும் தொழிலாளர்கள் பணியை புறக்கணித்து திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு முடிகாணிக்கை செய்ய வந்த ஏராளமான பக்தர்கள் முடி காணிக்கை செய்ய முடியாமல் பரிதவித்தனர். இதை அறிந்த கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் சமயபுரம் போலீசார் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, இதுகுறித்து உங்களுடைய குறைகளை மனுவாக எழுதிக் கொடுத்தால் உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இந்த சம்பவத்தால் சுமார் 3 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story