மணக்கோலத்தில் தேர்வு எழுதிய மாணவி
விழுப்புரம் அரசு கலைக்கல்லூரியில் மணக்கோலத்தில் தேர்வு மாணவி எழுதினாா்.
விழுப்புரம்:
விழுப்புரத்தை அடுத்த வளவனூர் அருகே உள்ள சாலையாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் யுவஸ்ரீ (வயது 23). இவர் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதுகலை கணினி அறிவியல் படித்து வருகிறார். இவருக்கு நேற்று காலை திருமணம் நடைபெற்றது.
இதனிடையே கல்லூரியில் செமஸ்டர் தேர்வு நடைபெற்றது. திருமணம் நடந்தாலும் செமஸ்டரில் தமிழ் தேர்வை எப்படியாவது எழுதிவிட வேண்டும் என்று மாணவி யுவஸ்ரீ முடிவு செய்தார். தன்னுடைய விருப்பத்தை பெற்றோரிடமும், மணமகன் வீட்டாரிடமும் கூறினார். அதற்கு அவர்களும் சம்மதம் தெரிவித்தனர்.
அதன்படி திருமணம் முடிந்த சில மணி நேரத்திலேயே மாணவி யுவஸ்ரீ, மணக்கோலத்தில் கல்லூரிக்கு சென்று செமஸ்டர் தேர்வு எழுதினார். அவரை, கல்லூரி பேராசிரியர்கள் வெகுவாக பாராட்டினர். மணக்கோலத்தில் தேர்வு எழுத வந்த யுவஸ்ரீயை மணமகன், கல்லூரிக்கு அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.