கணவனின் தலையில் கல்லை போட்டு கொலை
மதுகுடித்து விட்டு வந்து அடித்து கொடுமைப்படுத்தியதால் ஆத்திரம் அடைந்த பெண், கணவனின் தலையில் கல்லைப் போட்டு கொன்றார். அவரை போலீசார் கைது செய்தனர்.
சுந்தராபுரம்
மதுகுடித்து விட்டு வந்து அடித்து கொடுமைப்படுத்தியதால் ஆத்திரம் அடைந்த பெண், கணவனின் தலையில் கல்லைப் போட்டு கொன்றார். அவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
அடித்து கொடுமை
கோவை சுந்தராபுரம் அருகே உள்ள பிள்ளையார்புரத்தை சேர்ந்தவர் ரங்கன் (வயது 34). எலெக்ட்ரீசியன். இவருடைய மனைவி கோகுல ஈஸ்வரி (31). இவர்களுக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கோகுல ஈஸ்வரி அந்த பகுதியில் உள்ள மரக்கடையில் வேலை செய்து வருகிறார்.
வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வரும் ரங்கன் தினசரி மதுகுடித்து விட்டு வந்து, மனைவியை அடித்து கொடுமைப்படுத்தி உள்ளார். இதனை அவர் கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
கல்லைப் போட்டு கொலை
நேற்று முன்தினம் விடுமுறை நாள் என்பதால் வெளியே சென்ற ரங்கன் மதுகுடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் மது போதையில் மனைவியிடம் தகராறு செய்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனால் கணவர் மீது கோகுல ஈஸ்வரிக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
பின்னர் ரங்கன் குடிபோதையில் வீட்டில் படுத்து தூங்கினார். கணவர் மீது ஆத்திரத்தில் இருந்த கோகுல ஈஸ்வரி அவரை கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி வெளியே இருந்த கல்லை எடுத்து வந்து அயர்ந்து தூங்கிய ரங்கனின் தலையில் போட்டார். இதில் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ரங்கன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பெண் கைது
இந்த தகவல் கிடைத்ததும் போத்தனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் குடிபோதையில் தகராறு செய்த கணவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கோகுல ஈஸ்வரியை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.