நெல்மூட்டைகள் மழையில் நனைவதை தடுக்க நேரடி கொள்முதல் நிலையங்களில் கொட்டகை அமைக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை


நெல்மூட்டைகள் மழையில் நனைவதை தடுக்க நேரடி கொள்முதல் நிலையங்களில் கொட்டகை அமைக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 28 Jun 2023 12:15 AM IST (Updated: 28 Jun 2023 1:53 PM IST)
t-max-icont-min-icon

நெல்மூட்டைகள் மழையில் நனைவதை தடுக்க நேரடி கொள்முதல் நிலையங்களில் கொட்டகை அமைக்கவேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி

தமிழ்நாடு முழுவதும் நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் விவசாயிகளின் நலன் கருதி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறுவங்கூர், பெரியசிறுவத்தூர் உள்பட 33 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் விலை பலமடங்கு உயர்ந்துள்ளதாலும், விவசாய தொழிலாளர்களின் கூலியும் பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்த நிலையிலும் விவசாயிகள் சாகுபடி செய்த நெல் மூட்டைகளை தனியார் அரிசி ஆலை மற்றும் வியாபாரிகள் மிகவும் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்கிறார்கள். இதனால் பெரும்பாலான விவசாயிகள் அரசு மூலம் இயங்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஓரளவு விலை உயர்த்தி கொள்முதல் செய்வதால், தாங்கள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை நேரடி கொள்முதல் நிலையங்களில் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

பெரும் நஷ்டம்

ஆனால் அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில் கொட்டகை அமைக்கப்படாமல் உள்ளதால் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வரும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் அனைத்தும் திறந்தவெளியில் வைக்கப்பட்டு, ஓரிரு வாரம் கழித்து எடை போட்டு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே சில நேரங்களில் மழை பெய்யும் போது திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் தண்ணீரில் நனைந்து சேதம் அடைந்து வீணாகி வருகிறது.

மழையில் நனைந்த நெல் மூட்டைகள் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுவதால் கண்ணீர் வடித்து வருகிறார்கள். ஆகவே நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைத்து விற்பனை செய்ய ஏதுவாக கொட்டகை அமைத்து தர வேண்டும் என விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொட்டகை அமைக்க வேண்டும்

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் ஸ்டாலின் மணி கூறும்போது:-

மாவட்டம் முழுவதும் 33 இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. இங்கு விவசாயிகள் நெல் விற்பனை செய்யும் போது கூடுதல் விலை கிடைப்பதுடன், பணத்துக்கும் பாதுகாப்பு உண்டு. நெல் கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு ஒரு வார காலத்துக்குள் பணம் வழங்குகிறார்கள். நெல் எடை போடும் போது சீனியாரிட்டி முறை என்பதால் விவசாயிகள் தங்களது நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்து சென்று திறந்தவெளியில் அடுக்கி வைத்துள்ளனர். இவற்றை எடை போடுவதற்கு சுமார் ஒரு வாரம் முதல் 15 நாட்கள் வரை ஆகிறது. திடீரென மழை பெய்யும் போது நெல் மூட்டைகள் தண்ணீரில் நனைந்து நெல் முளைப்பு விட்டு சேதம் அடைகிறது.

மேலும் ஈரப்பதம் அதிகம் என கூறி விலையை குறைத்து வாங்குகிறார்கள். இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. தற்போது தஞ்சை, நாகை மாவட்டங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொட்டகை அமைக்கப்பட்டு வருகிறது. அதே போல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள் முதல் நிலையங்களிலும் நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்க கொட்டகை அமைத்து தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விலை குறைக்கக்கூடாது

அனைத்து விவசாயிகள் பிற்போக்கு சங்க தலைவர் ஷாயின்ஷா கூறும்போது:-

நெல் சாகுபடியை பொறுத்தவரை சில நேரங்களில் நோய் தாக்கி மகசூல் இல்லாத போது நஷ்டம் ஏற்படுகிறது. சில நேரங்களில் குறைந்த அளவிலான லாபம் கிடைக்கிறது. இருந்தாலும் விவசாயிகள் தங்கள் தொழிலை விடக்கூடாது என விவசாயம் செய்து வருகின்றனர். இப்படி பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே நெற்பயிரை அறுவடை செய்து விற்பனைக்காக கொண்டு வரும்போது வியாபாரிகள் மற்றும் தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்கிறார்கள். இதை தவிர்க்க அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து உள்ளது. இங்கு ஓரளவுக்கு விலையை உயர்த்தி தருகிறார்கள். ஆனால் நெல் மூட்டைகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. விவசாயிகள்கொண்டு வரும் நெல் மூட்டைகளை திறந்தவெளியில் வைப்பதால் அவை மழையில் நனைந்து சேதம் ஆகிறது. பின்னர் இந்த நெல் மூட்டைகளுக்கு குறைந்த விலை கேட்பதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. எனவே விவசாயிகள் நலன் கருதி ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களிலும் மேற்கூரையுடன் கூடிய கொட்டகை அமைத்து தர வேண்டும். இல்லையென்றால் மழையில் நனைந்த நெல் மூட்டைகளுக்கு விலையை குறைக்காமல் வழக்கமான விலையை தர வேண்டும். மேலும் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை எடை போடுவதற்கு ரூ.50 வசூல் செய்வதை தடுத்து நிறுத்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story