கன்னியாகுமரியில் பஸ் மோதி கப்பல் ஊழியர் பலிடிரைவர் கைது


கன்னியாகுமரியில் பஸ் மோதி கப்பல் ஊழியர் பலிடிரைவர் கைது
x
தினத்தந்தி 5 May 2023 7:15 PM (Updated: 5 May 2023 7:15 PM)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் மோட்டார் சைக்கிள் மீது சுற்றுலா பஸ் மோதியது. இதில் கப்பல் ஊழியர் பரிதாபமாக பலியானார். இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி

தென்தாமரைகுளம்:

கன்னியாகுமரியில் மோட்டார் சைக்கிள் மீது சுற்றுலா பஸ் மோதியது. இதில் கப்பல் ஊழியர் பரிதாபமாக பலியானார். இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

கப்பல் ஊழியர்

கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம் மேற்கு தெருவை சேர்ந்தவர் லிகோரி. இவருடைய மகன் டெனி லிகோ(வயது 23). இவர் வெளிநாட்டில் கப்பல் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். டெனி லிகோக்கு திருமணம் ஆகவில்லை.

இவர் 3 மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்தார்.

சுற்றுலா பஸ் மோதி பலி

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு டெனி லிகோ, தனது மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரி சாலையில் பெரியார் நகர் சந்திப்பில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி நோக்கி கேரள சுற்றுலா பஸ் மின்னல் வேகத்தில் வந்து பெரியார் நகருக்கு செல்வதற்காக திரும்பியது.

அப்போது டெனி லிகோ சென்ற மோட்டார் சைக்கிள் மீது சுற்றுலா பஸ் மோதியது. இதில் டெனி லிகோ தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

கைது

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும், கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று டெனி லிகோ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக கேரள சுற்றுலா பஸ்சை ஓட்டி வந்த முடியூர்கோணம் பந்தளம், பத்தனம் திட்டா பகுதியை ேசர்ந்த டிரைவர் பினுகுமாரை (46) போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story