தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்திற்கு ரூ.10 கோடி வழங்கிய ஷிவ் நாடார் பல்கலைக்கழகம்


தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்திற்கு ரூ.10 கோடி வழங்கிய ஷிவ் நாடார் பல்கலைக்கழகம்
x

தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் மாநிலத்தில் காலநிலை மாற்ற சவால்களை எதிர்கொள்ளும் முயற்சிகளில் முன்னோடியாக திகழ்கிறது.

சென்னை,

ஷிவ் நாடார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்திற்கு காலநிலை முன்முயற்சிகளுக்காக ரூபாய் 10 கோடி வழங்கியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-

ஷிவ் நாடார் பல்கலைக் கழகத்தின் வேந்தர் ஆர்.சீனிவாசன், தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்திடம் 10 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். இந்த காசோலையை தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு பெற்றுக்கொண்டார்.

ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தின் இந்த பங்களிப்பு, மாநில அரசின், மாநிலத்தின் பசுமை பரப்பினை மேம்படுத்துதல், மாநிலம் முழுவதும் நீல பசுமை மையங்களை நிறுவுதல் மற்றும் சமூக வளங்களை மேம்படுத்துதல் போன்ற முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும். தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம், ஜனவரி 2022-ல், இலாப நோக்கற்ற நிறுவனமாக பிரிவு 8-ன் கீழ் நிறுவப்பட்டது. இது மாநிலத்தில் காலநிலை மாற்ற சவால்களை எதிர்கொள்ளும் முயற்சிகளில் முன்னோடியாக திகழ்கிறது.

இந்நிறுவனம், நாட்டிலேயே முதன்முறையாக காலநிலை மாற்றத்திற்கு எதிரான முன்னெடுப்புகளை செயல்படுத்தும் நிறுவனமாக செயல்படுகிறது. மாநிலத்தின் நான்கு முக்கிய திட்டங்களை செயல்படுத்துவதற்கான முதன்மை நிறுவனமாகவும் இது செயல்படுகிறது.

மேலும், இந்த நிறுவனம், காலநிலை திறன்மிகு கிராமங்கள், பசுமைப் பள்ளிகள் மற்றும் நகரங்களின் பசுமை அட்டவணைப்படுத்துதல் போன்ற முன்முயற்சிகளில் கவனம் செலுத்துகிறது.

இது தமிழ்நாட்டின் காலநிலை - திறன்மிகு எதிர்காலத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் முக்கிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. தற்போதைய பசுமைப் பரப்பை 23.8% லிருந்து 33% ஆக அதிகரிக்க முயற்சிக்கிறது. மேலும் இந்த நிறுவனத்தின் மற்றுமொறு இயக்கமான ஈரநிலங்கள் இயக்கம், மாநிலத்தின் ஈரநிலங்களை சூழலியல் ரீதியாக மீட்டெடுப்பதற்காக தொடங்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் சமீபத்தில் தொடங்கப்பட்டதன் மூலம், கடலோர மீள் தன்மையை வலுப்படுத்தவும், கடலோர பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்தவும் மாநில அரசு உறுதி பூண்டுள்ளது.

ஷிவ் நாடார் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்திற்கு இடையேயான இந்த ஒத்துழைப்பு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதுடன் நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும் பசுமை முயற்சிகளுக்கு முன்னோடியாக அமைகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story