காயல்பட்டினத்தில் கடையடைப்பு
பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி செவ்வாய்க்கிழமை காயல்பட்டினத்தில் கடையடைப்பு நடத்தப்பட்டது. மேலும் த.மு.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காயல்பட்டினம்:
காயல்பட்டினத்தில் பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி நேற்று கடையடைப்பு நடத்தப்பட்டது. த.மு.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடையடைப்பு
பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தை ஒட்டி நேற்று காயல்பட்டினத்தில் முழு கடையடைப்பு நடைபெற்றது. மருந்து கடைகள் தவிர எந்த கடைகளும் திறக்கப்படவில்லை.
மேலும், ஆட்டோக்கள், கார்கள் உள்ளிட்ட எந்த வாகன போக்குவரத்தும் நடைபெறவில்லை. பள்ளிகள், வங்கிகள் வழக்கம் போல் செயல்பட்டன. பஸ்நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. காயல்பட்டினம், ஆறுமுகநேரி, திருச்செந்தூர் ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ரெயில் நிலையங்களில் பயணிகளின் உடைமைகளை போலீசார் சோதனை நடத்தினர்.
கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் காயல்பட்டினம் கிளை சார்பில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்தும், வழிபாட்டு உரிமை பாதுகாப்புக் கோரியும் காயப்பட்டினத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஆஸாத் தலைமை தாங்கினார்.
காயல்பட்டினம் நகர தலைவர் ஜாகீர், செயலாளர் ஹசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பேச்சாளர் செய்யது அலி, மாநில துணை செயலாளர் நெலஸ்க, தூத்துக்குடி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி இளைஞர் அணி அமைப்பாளர் விடுதலை செழியன், நகர செயலாளர் அஸ்மத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.