மாவட்டத்தில் கடையடைப்பு, மறியல்


மாவட்டத்தில் கடையடைப்பு, மறியல்
x
தினத்தந்தி 11 Oct 2023 5:45 PM GMT (Updated: 11 Oct 2023 5:47 PM GMT)

காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரியும், மத்திய அரசை கண்டித்தும் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடையடைப்பு, மறியல் நடைபெற்றது. 360 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

கடையடைப்பு

காவிரியில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் எதையும் ஏற்காமல் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அமைப்புகளை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் காவிரி படுகை மாவட்டங்களில் கடையடைப்பு, மறியல் போராட்டம் நடைபெறும் என விவசாய சங்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்து.

அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்லணை கால்வாய் பகுதிகளான நாகுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், மேற்பனைக்காடு, கீரமங்கலம், கறம்பக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. அந்த பகுதிகளில் இன்று காலை முதல் மாலை வரை கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மருந்தகம், பால் கடைகள் மட்டும் திறந்திருந்தன. டாஸ்மாக் கடைகள் திறந்திருந்தது. கடையடைப்பு போராட்டத்தினால் அந்த பகுதியில் உள்ள கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

மறியல் போராட்டம்

இதேபோல புதுக்கோட்டையில் அண்ணாசிலை அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கியை விவசாய சங்கத்தினர் முற்றுகையிட்டு தி.மு.க. தலைமையில் மறியல் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் தலைமை தாங்கினார்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், இந்திய விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவருமான மூத்த விவசாயி தனபதி, கல்லணை கால்வாய் விவசாயிகள் சங்க தலைவர் கொக்குமடை ரமேஷ், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், விவசாய தொழிலாளர் சங்கத்தினர், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்ட அரசியல் கட்சியினர், விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

கைது

போராட்டத்தின் போது மத்திய அரசை கண்டித்தும், கர்நாடக அமைப்புகளை கண்டித்தும் விவசாயிகள் கோஷம் எழுப்பினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்த மறியலில் 360-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். போராட்டம் குறித்து விவசாயிகள் கூறுகையில், "புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி நீர் கல்லணை கால்வாய் வழியாக பாய்ந்து செல்கிறது. சுமார் 27 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி நடைபெறுகிறது. காவிரியில் தண்ணீர் திறக்காததால் நெற்பயிர்கள் கருகி வருகின்றன. விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். எனவே தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய உரிய தண்ணீரை காவிரியில் திறந்து விட அம்மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.

கறம்பக்குடி

காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீரை திறந்துவிட கோரி தி.மு.க. கூட்டணி கட்சிகள் மற்றும் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கறம்பக்குடியில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. டீக்கடை, பெட்டிக்கடைகள் உள்பட நகர பகுதியில் உள்ள சுமார் 700 கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதேபோல் காவிரி பாசன பகுதிகளான ரெகுநாதபுரம், ஊரணிபுரம் பகுதிகளிலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது.

கீரமங்கலம்

கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களிலும் காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கோரி விவசாயிகளுக்கு ஆதரவாக வியாபாரிகளும் கடையடைப்பு போராட்டத்தில் பங்கேற்றனர்.

கீரமங்கலம், மேற்பனைக்காடு உள்பட சுற்றியுள்ள கிராமங்களிலும் முழுமையாக கடைகள் மூடப்பட்டிருந்தது. இதனால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டது. பஸ்களில் கூட்டம் இல்லாமல் சென்றது. பால், மருந்துக்கடைகள், டாஸ்மாக் கடைகள் திறந்திருந்தது. அரசு அலுவலகங்கள், வங்கிகள், பள்ளிகள் வழக்கம் போல இயங்கியது.

அறந்தாங்கி

அறந்தாங்கியில் விவசாயிகளுக்கு ஆதரவாக வணிகர்கள் சங்கத்தினர் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகுடி, சுப்பிரமணியபுரம், அரசர்குளம், கண்டிச்சங்காடு, திருவாப்பாடி, அத்தாணி ஆகிய பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

அரசு, தனியார் பஸ்கள் வழக்கம்போல் இயங்கின. சாலைகளில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.


Next Story