சன்னதி வீதியில் காளி ஓட்டம் நடத்தக்கோரி வியாபாரிகள் கடை அடைப்பு
சன்னதி வீதியில் காளி ஓட்டம் நடத்தக்கோரி வியாபாரிகள் கடைகளை அடைத்தனர்.
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலின் உபகோவிலாகவும் எல்லை காவல் தெய்வமாகவும் விளங்குவது பிடாரி இரணியம்மன் கோவில் ஆகும். தமிழகத்தில் முதல் எல்லை காவல் தெய்வ திருவிழா நடைபெறுவது இங்குதான். அதனை தொடர்ந்து தான் மற்ற கோவில்களில் விழா தொடங்கும். மிகவும் பிரசித்தி பெற்ற இந்த விழா 7 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு திருவிழாவிற்காக முதல் காப்பு கடந்த 7-ந் தேதி கட்டப்பட்டது. வருகிற 14-ந் தேதி 2-ம் காப்பு கட்டப்படவுள்ளது. அதனை தொடர்ந்து 19-ந் தேதி யானை வாகனத்திலும், 20-ந்தேதி குதிரை வாகனத்திலும் இரணியம்மன் எழுந்தருளி திருவானைக்காவல் பகுதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மூன்றாம் புறப்படாக 21-ந் தேதி பூத வாகனத்தில் இரணியம்மன் எழுந்தருளும்போது, திருவானைக்காவல் சன்னதி வீதியில் காளியம்மனின் கண் திறப்பும், காளிஓட்டமும் நடைபெறும்.
இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக காப்பு கட்டுதல் கைவிடப்பட்டு, கோவிலிலேயே காப்புகட்டு விழா நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பழைய முறைப்படி காப்பு கட்டி காளி ஓட்டம் நடைபெற வேண்டுமென்று திருவானைக்காவல் பகுதி மக்கள் விருப்பம் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை 3 மணி அளவில் சன்னதி வீதியில் உள்ள வியாபாரிகள் காளி ஓட்டத்துடன் விழா நடைபெற வேண்டுமென்று கோரி கடை அடைப்பு செய்தனர். இந்த கடையடைப்பு 3 மணி நேரம் நீடித்தது. அப்போது போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கடைகளை திறக்குமாறு வியாபாரிகளை கேட்டுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டு மீண்டும் கடைகள் திறக்கப்பட்டன. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.