அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதி


அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 2 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-03T11:37:40+05:30)

திருவாடானை தாலுகாவில் அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் இல்லாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை தாலுகாவில் அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் இல்லாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

அரசு ஆஸ்பத்திரிகள்

தொண்டி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் 5 டாக்டர்கள் இருக்க வேண்டிய இடத்தில் ஒரு டாக்டர் பணியிடம் கூட இல்லாமல் இருந்து வருகிறது. இதனால் மாற்று பணியாக ஒரு டாக்டர் மட்டும் அவ்வப்போது வந்து செல்கிறார். 24 மணி நேரமும் டாக்டர்கள் இருக்க வேண்டிய ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பணியிடம் காலியாக இருப்பதால் பொதுமக்கள் இரவு நேரங்களில் அவசர சிகிச்சைக்காக வந்தால் டாக்டர்கள் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக மருத்துவ சேவைகள் முறையாக கிடைக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதேபோல் இத்தாலுகாவில் உள்ள மங்களக்குடியில் ஒரு டாக்டர், வெள்ளையபுரத்தில் 2 டாக்டர், எஸ்.பி. பட்டினத்தில் ஒரு டாக்டர், திருவெற்றியூரில் 2 டாக்டர், பாண்டுகுடியில் ஒரு டாக்டர் பணியிடங்கள் காலியாக இருந்து வருகிறது. இதில் திருவெற்றியூர், வெள்ளையபுரம் அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்களே இல்லாமல் ஆஸ்பத்திரிகள் செயல்பட்டு வருகிறது.

டாக்டர்கள் பற்றாக்குறை

கடந்த சில மாதங்களாக டாக்டர்கள் முழுமையாக இல்லாமலும், பற்றாக்குறையாகவும் ஆஸ்பத்திரிகள் செயல்பட்டு வருவதால் இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு முறையான மருத்துவ சேவை கிடைக்கவில்லை. மேலும் வட்டார ஆஸ்பத்திரியில் இருந்து செயல்படும் நடமாடும் ஆஸ்பத்திரி, தேசிய குழந்தை நலத்திட்டம் போன்ற திட்டத்திற்கும் டாக்டர்கள் இல்லாததால் அந்த திட்டத்தின் கீழ் தினமும் நடைபெற வேண்டிய மருத்துவ சேவைகளும் தடைபட்டுள்ளது.

எனவே தமிழக அரசு திருவாடானை தாலுகாவில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு காலியாக உள்ள டாக்டர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story