சுகாதாரத்துறையில் மருத்துவர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை


சுகாதாரத்துறையில் மருத்துவர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை
x

சுகாதாரத்துறையில் மருத்துவர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நிர்வாக சீர்கேட்டால் தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளும் சீர் கெட்டுப்போய் உள்ளது. புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் இதுவரை ஏன் பட்டமளிப்பு விழா நடத்தவில்லை என்று நான் கேள்வி எழுப்பிய பிறகுதான் நேற்று முன்தினம் மருத்துவ படிப்பு முடித்து முதல் பேட்ச் வெளியே செல்பவர்களுக்கு பட்டமும் வழங்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் புதுக்கோட்டைக்கு வந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அன்னவாசல் மருத்துவமனையை ஆய்வு செய்து, மருத்துவமனை தலைமை மருத்துவரை பணியிடை மாற்றம் செய்தும், மருத்துவ பணிகள் இணை இயக்குனரை பணியிட நீக்கம் செய்தும் உத்தரவிட்டுள்ளார்.

ஆனால் சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இந்த நிலை தான் உள்ளது. அனைத்து மருத்துவமனைகளிலும் அமைச்சர் ஆய்வு செய்து அனைவரையும் பணியிடை நீக்கம் செய்தால் இவர்களுடைய ஆட்சியையும் நீக்கம் செய்யும் நிலைதான் வரும். மருத்துவர்களை பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட்டு அவர்களை அரவணைத்து செல்ல வேண்டும். தற்போது சுகாதாரத்துறையில் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது. பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. அதனை போக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மருத்துவர்கள், இணை இயக்குனரையும் குறை சொல்வது அமைச்சரிடம் திறன் இல்லாததையே காட்டுகிறது. அமைச்சர் தன்னை முன்னிலைப்படுத்துவதற்காக இணை இயக்குனரை பணியிடை நீக்கம் செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. இணை இயக்குனரை அவ்வளவு எளிதாக பணியிடை நீக்கம் செய்ய முடியாது. முதலில் அவரிடம் விளக்கம் கேட்க வேண்டும். விளக்கம் சரியில்லை என்றால் விசாரணை செய்து அதன் பிறகு பணியிடை நீக்கம் செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story