கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொலை: மேட்டூர் மீனவரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு-சொந்த ஊரில் அடக்கம்


கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட மேட்டூர் மீனவரின் உடல் அவரது உறவினர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அவரது சொந்த ஊரில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

சேலம்

மீனவர் உடல் மீட்பு

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் கோவிந்தபாடி பகுதியை சேர்ந்தவர் காரவடையான் என்கிற ராஜா (வயது 45). செட்டிப்பட்டியை சேர்ந்தவர்கள் ரவி (40), இளைய பெருமாள் 40). மீனவர்களான இவர்கள் 3 பேரும் கடந்த 14-ந் தேதி தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள அடிப்பாலாறு பகுதியில் காவிரி ஆற்றில் மீன்பிடிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, அவர்கள் மீது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில், ரவி, இளைய பெருமாள் ஆகியோர் அங்கிருந்த தப்பிஓடிவிட்டனர். ராஜா மட்டும் மாட்டிக்கொண்டார். வனத்துறையினருடன் நடந்த சண்டையில் அவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து மாயமானார்.

இதனிடையே, ஈரோடு வனப்பகுதிக்கு உட்பட்ட அடிப்பாலாறு பகுதியில் சொரிப்பாறை என்ற இடத்தில் காவிரி ஆற்றில் ராஜாவின் உடல் மிதப்பதாக பர்கூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

உறவினர்கள் போராட்டம்

ராஜாவின் உயிரிழப்புக்கு காரணமான கர்நாடக வனத்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது மனைவி பவுனா மற்றும் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரியில் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது. இதையடுத்து ராஜாவின் உறவினர்களிடம் சேலம் உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினி மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் நேற்று முன்தினம் இரவு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

அதில், ராஜாவின் உடலில் துப்பாக்கி குண்டு துளைத்ததற்கான அறிகுறி தென்படவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து ராஜாவின் உறவினர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினர். கருமலைக்கூடல் போலீஸ் நிலையத்தில் வைத்து இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது, மேட்டூர் சதாசிவம் எம்.எல்.ஏ. மற்றும் பா.ம.க. நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். பின்னர் உயிரிழந்த ராஜாவின் உடலை பெற்று சென்று அடக்கம் செய்கிறோம் என்று உறவினர்கள் உறுதியளித்தனர்.

உடல் ஒப்படைப்பு

இந்த நிலையில், நேற்று காலை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு உயிரிழந்த ராஜாவின் உறவினர்கள் வந்தனர். பின்னர் அவர்களிடம் பர்கூர் போலீசார், ராஜாவின் உடலை ஒப்படைத்தனர்.

இதையடுத்து அவர்கள் ஆம்புலன்சில் உடலை மேட்டூர் அருகே உள்ள அவரது சொந்த ஊரான கோவிந்தபாடிக்கு எடுத்து சென்றனர். பின்னர் அங்கு ராஜாவின் உடலை அடக்கம் செய்தனர்.

ரூ.5 லட்சம் நிதி உதவி

இதைத்தொடர்ந்து ராஜாவின் சொந்த ஊரான ேகாவிந்தபாடிக்கு வந்த சேலம் வருவாய் அதிகாரி மேனகா, மேட்டூர் உதவி கலெக்டர் தணிகாசலம், சதாசிவம் எம்.எல்.ஏ. ஆகியோர் தமிழக அரசின் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை இறந்து போன ராஜாவின் குடும்பத்தினரிடம் வழங்கினர். அதேபோல பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணியின் மகன் ஜி,கே.எம். தமிழ்குமரன் ரூ.50 ஆயிரம் நிதி உதவியை வழங்கினார்.

இதனிடையே, மீனவர் ராஜாவின் மனைவி பவுனாவுக்கு கொளத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் குழந்தைகள் பராமரிப்பு வேலை வழங்குவதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் நடவடிக்கை எடுத்து அதற்கான பணி ஆணையை நேற்று முன்தினம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story