கியாஸ் சிலிண்டர் குடோன் அமைப்பது தொடர்பான சமாதான கூட்டத்தில் கூச்சல், குழப்பம்


கியாஸ் சிலிண்டர் குடோன் அமைப்பது தொடர்பான சமாதான கூட்டத்தில் கூச்சல், குழப்பம்
x

சமையல் கியாஸ் சிலிண்டர் குடோன் அமைப்பது தொடர்பான சமாதான பேச்சுவார்த்தை கூட்டத்தில் கூச்சல், குழப்பம் நிலவியது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த மங்காவரம் ஊராட்சிக்கு உட்பட்ட ராஜாபாளையம் கிராமத்தில் புதிதாக தனியாருக்கு சொந்தமான சமையல் கியாஸ் சிலிண்டர் குடோன் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. குடோன் அமைப்பதற்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் முதல் கட்ட ஒப்புதல் கொடுத்த நிலையில் கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து கடந்த 4 மாத காலத்திற்கு மேலாக அப்பகுதியில் சமையல் கியாஸ் சிலிண்டர் குடோன் அமைக்க இயலாத சூழல் உள்ளது.

சமையல் கியாஸ் சிலிண்டர் குடோன் அமைக்கப்பட்டால் திருவிழாவின் போது அருகே உள்ள பொது இடத்தில் பட்டாசு வெடிக்க முடியாது என்றும், குடோன் அமைய உள்ள இடம் விவசாய நிலத்திற்கு அருகில் உள்ளது போன்ற காரணங்களை சுட்டி காட்டி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த பிரச்சினை தொடர்பாக கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் இரு தரப்பினரையும் நேரில் அழைத்து சமாதான பேச்சு வார்த்தை கூட்டம் தாசில்தார் கே.கண்ணன் தலைமையில் நடை பெற்றது. துணை தாசில்தார் டி.கண்ணன், இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் திருவிழா உள்பட முக்கிய சமயங்களில் முன்னதாக குடோனில் இருப்பு வைக்க மாட்டார்கள் என்றும் தனியார் குடோன் அமைப்பாளர் உறுதி அளித்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கு கூட்டத்திற்கு வந்திருந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் கூட்டத்தில் கூச்சல், குழப்பம் நிலவியது.


Next Story