கோவிலில் தங்கி இறை பணியாற்றியஅண்ணன்-தம்பிக்கு பாலியல் தொந்தரவு; போலி சாமியார் கைதுதிருக்கோவிலூர் போலீசார் நடவடிக்கை


கோவிலில் தங்கி இறை பணியாற்றியஅண்ணன்-தம்பிக்கு பாலியல் தொந்தரவு; போலி சாமியார் கைதுதிருக்கோவிலூர் போலீசார் நடவடிக்கை
x
தினத்தந்தி 11 Aug 2023 12:15 AM IST (Updated: 11 Aug 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே கோவிலில் தங்கி இறை பணியாற்றிய அண்ணன்-தம்பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலி சாமியார் கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி


திருக்கோவிலூர்,

சாமியார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த வாணாபுரம் தாலுகா பாசார் கிராமத்தில் பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் இளையான்குடி நாயனார் திருமடத்தை சேர்ந்த பெருமாள் மகன் சிவபாலன் (வயது 41) என்பவர் சாமியாராக இருந்து கொண்டு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு குறி சொல்லி வந்தார்.

இதை அறிந்த கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த 35 வயதுடைய பெண் தனது 2 மகன்களை அழைத்து வந்து அந்த சாமியாரை சந்தித்தார்.

அப்போது அந்த பெண், தனக்கும் தனது கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மகன்களுடன் தனியாக வசித்து வருவதாகவும், குடும்பம் ஒன்று சேர வழி சொல்லுமாறும் அந்த சாமியாரிடம் கேட்டுள்ளார். அதற்கு சாமியார், 2 மகன்களும் கோவிலில் சில காலம் தங்கி தொண்டு புரிந்து வந்தால் குடும்பம் ஒன்று சேரும் என கூறியுள்ளார். இதை நம்பிய அந்த பெண், தனது 2 மகன்களையும் கோவிலில் விட்டு செல்ல முடிவு செய்கிறார். அந்த பெண்ணின் மகன்களான அண்ணன்-தம்பி இருவரும் அரசு பள்ளியில் முறையே 12 மற்றும் 9-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள். குடும்ப நன்மைக்காக அண்ணன், தம்பி இருவரும் தனது தாயாரின் வேண்டுக்கோளை ஏற்று, அந்த கோவிலிலேயே தங்க சம்மதிக்கின்றனர்.

அதன்படி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் அந்த பெண் தனது 2 மகன்களையும் சாமியாரிடம் விட்டு சென்றார்.

பாலியல் துன்புறுத்தல்

இந்த நிலையில் கடந்த மாதம் கோவிலில் தங்கியிருந்த மகன்கள் 2 பேரும் தங்களுக்கு உடம்பு சரி இல்லை எனவும், எங்களை வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படி தாயாருக்கு தகவல் கொடுத்தனர். இதை கேட்டு பதறிய அந்த பெண் கோவிலுக்கு வந்து தனது மகன்கள் 2 பேரையும் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அப்போது மகன்கள் 2 பேரும் தாயிடம், சாமியார் சிவபாலன் தங்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன் தவறாக நடக்க முயன்றதாக கூறினர்.

இதைகேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் இதுபற்றி திருக்கோவிலூர் குழந்தைகள் நலக்குழு மற்றும் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.

கைது

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதிகா தலைமையிலான போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், சிவபாலன் போலி சாமியார் என்பதும், கோவிலில் தங்கிய சிறுவர்களான அண்ணன்-தம்பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து சிவபாலனை போலீசார் கைது செய்தனர்.

கோவிலில் தங்கி இறை பணியில் ஈடுபட்டிருந்த அண்ணன், தம்பி இருவரிடம் போலி சாமியார் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story