பிளஸ்-1 மாணவருக்கு அரிவாள் வெட்டு
கீழக்கரையில் பிளஸ்-1 மாணவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கீழக்கரை,
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பக்ரீத் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் கண்காட்சி திடல் அமைக்கப்பட்டு இருந்தது. வெளியூர், உள்ளூரை சேர்ந்தவர்கள் பார்வையிட்டனர்.
இந்நிலையில் கீழக்கரைக்கு நேற்று முன்தினம் பக்ரீத் விடுமுறையையொட்டி ஏர்வாடியை சேர்ந்த ஜகுபர் சுல்தான் மகன் முகமது சுஹைல்(வயது 16) தனது நண்பர்களுடன் வந்திருந்தார். பிளஸ்-1 மாணவரான முகமது சுஹைல் கண்காட்சியை பார்த்து விட்டு திரும்பி செல்லும் போது, அங்கு உட்கார்ந்திருந்த ஒருவரது காலை மிதித்து விட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபரும், அவருடன் வந்தவர்களும் மாணவர் முகமது சுஹைலை கடுமையாக தாக்கி துரத்தினர். இதனால் அந்த மாணவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். வடக்கு தெரு பகுதியில் அந்த கும்பலை சேர்ந்த 5 பேர், மாணவரை அரிவாளால் வெட்டினர். இதை தடுக்க முயன்றதால் மாணவரின் வலது கையில் காயம் ஏற்பட்டது. பின்னர் பொதுமக்கள் திரண்டதால் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது.
காயம் அடைந்த மாணவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு கீழக்கரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து கீழக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.