தட்டிக்கேட்ட வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு


தட்டிக்கேட்ட வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு
x

தட்டிக்கேட்ட வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு

கோயம்புத்தூர்

சரவணம்பட்டி

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகன் சக்திவேல் (வயது21). இவர் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.பி.ஏ. படித்தார். அதனைத் தொடர்ந்து படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கோவை சரவணம்பட்டி பகுதியில் தங்கி இருந்த அவரது நண்பர்கள் முருகமணி, கணேஷ், சந்துரு, கமலேஷ் ஆகியோருடன் சேர்ந்து வேலை தேடி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி இரவு 10 மணிக்கு சக்திவேல் தனது நண்பர்களுடன் சரவணம்பட்டியில் இருந்து துடியலூர் செல்லும் சாலையில் உள்ள மருந்து கடைக்கு மருந்து வாங்குவதற்காக சென்றுள்ளார்.

அப்போது அங்கு மது போதையில் இருந்த 3 வாலிபர்கள் ஒரு இளம்பெண்ணை நிறுத்தி கைகளால் தாக்கிக் கொண்டிருந்தனர். இதனால் அந்த இளம்பெண் என்ன செய்வதென்று தெரியாமல் அழுது கொண்டிருந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக்திவேலும் அவரது நண்பர்களும் அந்த இளம்பெண்ணை தாக்கிய வாலிபர்களை தட்டி கேட்டு சத்தம் போட்டதால் அந்த வாலிபர்கள் இளம்பெண்ணை விட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.

இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு சக்திவேல் தனது நண்பர்களுடன் அதே பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ஏற்கனவே இளம் பெண்ணை அடித்து துன்புறுத்திய அந்த 3 வாலிபர்கள் மேலும் 4 பேரை அழைத்துக்கொண்டு வந்து சக்திவேலை அடையாளம் காட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த வாலிபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் அரிவாளை எடுத்து சக்திவேலை வெட்ட முயன்றனர். அப்போது சக்திவேல் தடுக்க முயன்றும் தலை மற்றும் வலது கை தோள்பட்டையில் அரிவாள் வெட்டு விழுந்தது.

மேலும் இதனை தடுக்க முயன்ற சக்திவேலின் நண்பர்கள் முருகமணி, கணேஷ் ஆகியோருக்கும் கைகள் மற்றும் முதுகில் வெட்டு விழுந்தது.

இதில் பலத்த காயமடைந்த சக்திவேல், முருகமணி, கணேஷ் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். இதற்கிடையில் அவர்களை வெட்டிய அந்த 7 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இதுகுறித்து தகவலறிந்த சரவணம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். படுகாயங்களுடன் போராடிய சக்திவேல் மற்றும் அவரது நண்பர்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகசேர்த்தனர். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேர் கொண்ட மர்ம கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.


Next Story