திண்டிவனம் அருகே பரபரப்பு வீடு புகுந்து தொழிலாளியை ஓடஓட விரட்டி வெட்டிய கும்பல் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை


திண்டிவனம் அருகே பரபரப்பு  வீடு புகுந்து தொழிலாளியை ஓடஓட விரட்டி வெட்டிய கும்பல்  ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
x

திண்டிவனம் அருகே வீடு புகுந்து தொழிலாளியை ஒரு கும்பல் ஓடஓட விரட்டி வெட்டியது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

விழுப்புரம்

திண்டிவனம்,

திண்டிவனம் அருகே அகூர் புதுகாலனி பகுதியை சேர்ந்தவர் எமராஜன் மகன் கோபாலகிருஷ்ணன்(வயது 30). தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு கோபாலகிருஷ்ணன் வீட்டின் வெளியே உள்ள கொட்டகையில் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.அப்போது ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் கொட்டகையில் தூங்கி கொண்டிருந்த கோபாலகிருஷ்ணனை சூழ்ந்து அரிவாளால் வெட்டியது.

வெட்டுக்காயங்களுடன் தப்பிக்க முயன்ற கோபாலகிருஷ்ணனை ஓட,ஓட விரட்டிய அந்த கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர்.

போலீஸ் விசாரணை

இதுபற்றி தகவல் அறிந்த வெள்ளிமேடுபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கோபாலகிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதற்கிடையே, திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன்(பொறுப்பு), போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிபாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோபாலகிருஷ்ணனின் தாய் பவுனம்மாள் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.

வாலிபர் கைது

அப்போது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஆட்டோவில் சிலர் சந்தேகப்படும் படியாக இங்கு சுற்றியதாக தெரிவித்தனர். அதன்பேரில் அந்தபகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவில் வந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர்.

அதில், அவர் சென்னை வியாசர்பாடி சி.கல்யாணபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவரான ரஞ்சித்குமார் மகன் பிரேம்குமார் (வயது 23) என்பது தெரியவந்தது. இவர் உள்பட 7 பேர் கொண்ட கும்பல் கோபாலகிருஷ்ணனை வெட்டிவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து பிரேம்குமாரை போலீசார் கைது செய்து, கொலை முயற்சிக்கான காரணம் குறித்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் தப்பி சென்றவர்களையும் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அகூர் பகுதியில பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story