சித்தப்பாவுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
17 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய சித்தப்பாவுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்தது.
கோவை
17 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய சித்தப்பாவுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்தது.
சிறுமி பலாத்காரம்
கோவை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. கடந்த 2019-ம் ஆண்டு சிறுமியின் தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த சிறுமியை அவருடைய சித்தப்பா கவனித்து கொள்வதாக உறவினர்களிடம் கூறி உள்ளார். இதையடுத்து உறவினர்கள் அவரை வீட்டிற்குள் அனுமதித்தனர்.
இந்தநிலையில் செப்டம்பர் மாதம் 18-ந் தேதி இரவில் தூங்கிக்கொண்டு இருந்த சிறுமியை அவரது சித்தப்பா பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் இதை வெளியே சொன்னால் கொன்றுவிடுவதாக மிரட்டினார். இதனால் சிறுமி அதுபற்றி வெளியே கூறவில்லை.
சிறை தண்டனை
இதையடுத்து சிறுமி கர்ப்பிணியானார். பின்னர் அந்த சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதை அறிந்த பேரூர் அனைத்து மகளிர் போலீசார் சிறுமியின் சித்தப்பா மீது போக்சோ மற்றும் கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை கோவை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த போக்சோ கோர்ட்டு நீதிபதி குலசேகரன், சிறுமியை கர்ப்பிணியாக்கிய சித்தப்பாவுக்கு போக்சோ வழக்கில் 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், கொலை மிரட்டல் வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் சிறை தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்கவும், சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.