சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
பெரம்பலூர்-துறையூர் சாலையில் கல்யாண் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை முதற்கால யாகசாலை பூஜையும், நேற்று காலை 2-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது. நேற்று காலை 9.30 மணிக்கு யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கடம் புறப்பாடு நடந்தது. பின்னர் காலை 9.50 மணியளவில் கோவில் கோபுர விமான கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து, தீபாராதனை காட்டினர். அப்போது கூடியிருந்த பக்தர்கள் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் காலை 10.10 மணியளவில் மூலவர் சித்தி விநாயகருக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டதை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கல்யாண் நகர் பொதுமக்கள் செய்திருந்தனர்.