நரசிங்கபுரத்தில்நகரசபை அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் முற்றுகை
ஆத்தூர்
ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் நகரசபையில் தூய்மை பணியாளர்கள் 71 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த 3 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஒப்பந்த பணியாளர்கள் 71 பேரும், நேற்று காலை நரசிங்கபுரம் நகரசபை அலுவலகத்தில் உள்ள 18 வார்டுகளுக்கும் துப்புரவு பணிக்கு செல்லாமல் நகரசபை அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். நகரசபை ஆணையாளர் முகமது சம்சுதீன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் நகரபை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சம்பள பாக்கி வழங்காமல் நாங்கள் பணிக்கு திரும்ப மாட்டோம் என தூய்மை பணியாளர்கள் கூறியதை அடுத்து ஒரு மாத சம்பளம் உடனடியாக வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் தூய்மை பணியாளர்கள் நரசிங்கபுரம் நகரசபை பகுதியில் துப்புரவு பணிக்கு சென்றனர்.