பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்
பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்தலில் முறைகேடு நடந்தாக கூறி பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டனர்.
பாப்பிரெட்டிப்பட்டி:
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே மெணசியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்தல் நடந்தது. இதில் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 6-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை 15 இயக்குனர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஊராட்சி மன்ற தலைவர், தலைமை ஆசிரியர், ஊராட்சி மன்ற உறுப்பினர், சமூக ஆர்வலர், கல்வியாளர்கள் என 5 இயக்குனர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதிலிருந்து மேலாண்மை கல்வி குழு தலைவர், துணைத்தலைவர் தேர்ந்தெடுக்க மாணவர்களின் பெற்றோர்கள் மட்டுமல்லாமல், பெற்றோர்கள் அல்லாதவர்களும் கலந்து கொண்டனர். இவர்கள் மூலம் குரல் வாக்கெடுப்பு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினருக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. முறையாக பள்ளி தலைமை ஆசிரியர் தகவல் தெரிவிக்கப்படவில்லை. குரல் வாக்கெடுப்பில் இந்த தேர்தல் முறைகேடாக நடைபெற்றுள்ளன. ஆகவே இந்த பள்ளி மேலாண்மை குழு இயக்குனர் தேர்தலை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அவர்கள் பள்ளியை முற்றுகையிட்டு தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா, வருவாய்த்துறை அலுவலர்கள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்மணியிடம் கேட்டபோது இது குறித்து முழுமையான அறிக்கை வரும் திங்கட்கிழமை மாவட்ட முதுமை கல்வி அலுவலருக்கு அனுப்பப்படும். அதன் பின்பு எதுவும் கூற முடியும் என கூறினார்.