தாளவாடியில் உரம் தட்டுப்பாடு: கூட்டுறவு வங்கியை விவசாயிகள் முற்றுகை


தாளவாடியில்  உரம் தட்டுப்பாடு: கூட்டுறவு வங்கியை விவசாயிகள் முற்றுகை
x

தாளவாடியில் உரத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் கூட்டுறவு வங்கியை விவசாயிகள் முற்றுகையிட்டார்கள்.

ஈரோடு

தாளவாடி

தாளவாடியில் உரத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் கூட்டுறவு வங்கியை விவசாயிகள் முற்றுகையிட்டார்கள்.

யூரியாவுக்கு தட்டுப்பாடு

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மானாவாரி நிலங்களில் விவசாயிகள் மக்காச்சோளம், ராகி பயிர் செய்வது வழக்கம். இந்த ஆண்டு சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மக்காசோளமும், 2 ஆயிரம் ஏக்கரில் ராகியும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தற்போது தாளவாடி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நேரத்தில் பயிர்களுக்கு யூரியா உரம் வைத்தால் நன்கு வளரும். ஆனால் கடந்த சில வாரங்களாக தாளவாடி பகுதியில் யூரியாவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கி மட்டுமின்றி தனியார் உரக்கடைகளிலும் உரம் கிடைக்காததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளார்கள்.

விவசாயிகள் வேதனை

இந்தநிலையில் நேற்று காலை தாளவாடி கூட்டுறவு வங்கிக்கு யூரியா உரம் வந்திருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே நூற்றுக்கணக்கான விவசாயிகள் கூட்டுறவு வங்கி முன்பு குவிந்தார்கள். வங்கியின் கதவு திறக்கப்பட்ட உடன், ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தார்கள். விவசாயி ஒருவருக்கு 5 முதல் 8 மூட்டை யூரியா வேண்டும். ஆனால் 70 மூட்டை உரம் மட்டுமே வந்திருந்ததால் ஒருவருக்கு ஒரு மூட்டை மட்டுமே வழங்கப்பட்டது. மேலும் பல விவசாயிகளுக்கு உரம் கிடைக்கவில்லை. அதனால் கூட்டுறவு வங்கியை விவசாயிகள் முற்றுைகயிட்டார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றார்கள்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, 'மலைப்பகுதியில் விவசாயம் செய்வதே கடினம். இதிலும் உரத்தட்டுபாடு எங்களை மேலும் வேதனைப்படுத்துகிறது. மாவட்ட நிர்வாகம் உடனே இந்த பிரச்சினையில் தலையிட்டு அனைத்து விவசாயிகளுக்கும் உரம் கிடைக்க ஆவன செய்யவேண்டும்' என்றார்கள்.


Next Story