திருப்பத்தூர் ரெயில் நிலையத்தில் சிக்னல் பெட்டி உடைப்பு
திருப்பத்தூர் ரெயில் நிலையத்தில் உள்ள சிக்னல் பெட்டி உடைக்கப்பட்டது. விபத்தை ஏற்படுத்த சதி நடந்ததா என்பது குறித்து 5 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்னலில் அதிர்வு
திருப்பத்தூர் ரெயில் நிலையத்தில், நிலைய மேலாளர் அறையில் அவ்வப்போது ரெயில் பாதையை மாற்றி அமைக்கும் ரெயில்வே தானியங்கி சிக்னல் கட்டுப்பாடு இருக்கும். இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் ரெயில்நிலைய மேலாளர் அறையில் இருந்த ெரயில்வே சிக்னலில் நேற்று முன்தினம் இரவு 10.8 மணியளவில் திடீரென அதிர்வு ஏற்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த ரெயில் நிலைய மேலாளர் அனில்குமார் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சென்று ஆய்வு செய்தனர்.
சிக்னல் பெட்டி உடைப்பு
அதில் ரெயில் பாதையில் அமைக்கப்பட்டிருந்த சிக்னல் பெட்டியின் மூடி உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ரெயில் நிலையம் அருகில் உள்ள கட்டிடங்கள், குடியிருப்புகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் தடயம் கிடைக்குமா? என ஆய்வு செய்து வருகின்றனர்.
இதற்கிடையே சேலம் கோட்ட ரெயில்வே பாதுகாப்பு படையின் துப்புதுலக்கும் மோப்ப நாய் ப்ரூக்ஸ் வரவழைக்கப்பட்டது. இருப்பினும் தடயம் ஏதும் சிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து ரெயில்வே பாதுகாப்பு படை டிவிஷன் செக்யூரிட்டி கமிஷனர் சவ்ரோகுமார், சேலம் ரெயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு பெரியசாமி, திருப்பத்தூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு செந்தில் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். சந்தேகத்தின்பேரில் அங்கு அமர்ந்து இருந்த திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த கோகுல் (வயது 30) என்பவரிடம் விசாரணை நடத்தி, தேவைப்படும் போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கூறி அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, திருப்பத்தூர் ெரயில் நிலைய மேலாளர் அனில்குமார் அளித்த புகாரின் பேரில், ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
5 தனிப்படை
மேலும், இதுகுறித்து விசாரிக்க ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விபத்தை ஏற்படுத்த சதியா என விசாரித்து வருகின்றனர்.
ஒடிசாவில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் 275-க்கும் மேற்பட்டவர்கள் இறந்த நிலையில் திருப்பத்தூரில் ெரயில் நிலையத்தில் சிக்னல் உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.