ரெயில்நிலையத்தில் சிக்னல் பழுது; 30 நிமிடம் காலதாமதமாக சென்ற 2 ரெயில்கள்


ரெயில்நிலையத்தில் சிக்னல் பழுது; 30 நிமிடம் காலதாமதமாக சென்ற 2 ரெயில்கள்
x

கடலூர் திருப்பா திரிப்புலியூர் ரெயில்நிலையத்தில் சிக்னல் பழுதால், 2 ரெயில்கள் காலதாமதமாக சென்றது. இதனால் வாகன ஓட்டிகள், பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

கடலூர்

கடலூர் திருப்பாதிரிப்புலியூர்- கம்மியம்பேட்டை இடையே ரெயில்வே கேட் உள்ளது. இந்த ரெயில்வே கேட்டை கடந்து தான், தினந்தோறும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் சென்று வருகின்றனர். அப்படி செல்லும் போது, ரெயில்வே கேட்டை மூடுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படும் நிலை உள்ளது. ஏற்கனவே இந்த ரெயில்வே கேட் அடிக்கடி பழுது காரணமாகவும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று மயிலாடுதுறை- விழுப்புரம் பயணிகள் ரெயில் காலை 8.30 மணிக்கு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. சற்று நேரத்தில் 8.35 மணி அளவில் மன்னார்குடியில் இருந்து திருப்பதி செல்லும் விரைவு ரெயிலும் திருப்பாதிரிப்புலியூர் ரெயில்நிலையத்திற்கு வந்தது. ஆனால் கம்மியம்பேட்டை ரெயில்வேகேட் அருகே உள்ள சிக்னல் பழுதால், அந்த 2 ரெயில்களும் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டன.

பயணிகள் அவதி

இதற்கிடையில் ரெயில்வே கேட்டை மூடியும் சிக்னல் கிடைக்காததால், கேட் கீப்பர் என்ன? செய்வதென்று தெரியாமல் தவித்தார். அப்போது தான், தண்டவாளத்தை மாற்றி விடும் பகுதியில் (பாயிண்ட்) பலகை ஒன்று அடைத்துக் கொண்டிருந்ததை பார்த்தார். அவர் அதை அகற்ற முயன்றும் முடியவில்லை. உடன் அவர் இது பற்றி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் ரெயில் நிலைய அதிகாரிகள், ஊழியர்கள் விரைந்து வந்து, பாயிண்டில் அடைத்து இருந்த பலகையை அகற்றினர்.

அதன்பிறகு சிக்னல் கிடைத்தது. தொடர்ந்து 2 ரெயில்களும் 30 நிமிடம் காலதாமத்திற்கு பிறகு ஒவ்வொன்றாக சென்றது. இருப்பினும் இந்த ரெயில்வே கேட் பழுதால், ரெயில் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

பரபரப்பு

அதேபோல் கம்மியம்பேட்டை ரெயில்வே கேட்டின் இரு புறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. இதனால் காலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்ற மாணவர்கள், வேலைக்கு செல்வோர், வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். சிலர் லாரன்ஸ் ரோடு சுரங்கப்பாதை வழியாக மாற்றுப்பாதையில் சென்றதையும் பார்க்க முடிந்தது. இருப்பினும் இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story