அவசர சிகிச்சை பிரிவு தொடங்க கோரி மவுன ஊர்வலம்


அவசர சிகிச்சை பிரிவு தொடங்க கோரி மவுன ஊர்வலம்
x

கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு தொடங்க கோரி மவுன ஊர்வலம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

கறம்பக்குடியில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 30 படுக்கைகள் கொண்ட உள் நோயாளிகள் பிரிவும் செயல்பட்டு வருகிறது. தாலுகா தலைமை மருத்துவமனையாக உள்ள இதில் 3 டாக்டர்கள் பணியிடம் உள்ளது. ஆனால் ஒரு டாக்டர் மட்டுமே பணியில் உள்ளார். இரவு நேரங்களில் டாக்டர்கள் இருப்பது இல்லை. செவிலியர்களும் போதுமான அளவில் இல்லை. உரிய பணியாளர்கள் இல்லாமல் மருத்துவ உபகரணங்கள் பயன்படுத்தபடாமல் உள்ளன. இதனால் கறம்பக்குடியில் அவசர சிகிச்சை பெறமுடியாத நிலை தொடர்ந்து வருகிறது. எனவே கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவை தொடங்க வேண்டும், மருத்துவமனையை மேம்படுத்தி கூடுதல் டாக்டர்கள் நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கறம்பக்குடி வள்ளுவர் திடலில் கடந்த 11 நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கறம்பக்குடியை சேர்ந்த எலக்ட்ரீசியன் தமிழ்ச்செல்வன் என்பவர் நேற்று நெஞ்சுவலி ஏற்பட்டு கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்றார். அப்போது அங்கு டாக்டர்கள் இல்லை. செவிலியர்கள் மட்டும் சிகிச்சை அளிக்க முற்பட்டனர். ஆனால் உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாததால் அவர் இறந்தார். இதையறிந்த போராட்டக்குழுவினர் இன்று மாலை காத்திருப்பு போராட்டம் நடைபெறும் இடத்தில் இருந்து கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் உரிய நேரத்தில் சிகிச்சை பெறமுடியாமல் இறந்த தமிழ்ச்செல்வனுக்கு அஞ்சலி என்ற பேனருடனும், கறம்பக்குடியில் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவை உடனே தொடங்க வேண்டும் என வலியுறுத்தும் பதாகைகளையும் ஏந்தியபடி மவுன ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தொடங்கி, டோல்கேட் வீதி, திருவோணம் சாலை, சீனிகடை முக்கம், கச்சேரிவீதி வழியாக சென்று வள்ளுவர் திடலில் நிறைவடைந்தது. இதில் அரசியல் கட்சியினர், வியாபாரிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story