அமராவதி பிரதான கால்வாய் தூர் வாரும் பணிகள் தீவிரம்


அமராவதி பிரதான கால்வாய் தூர் வாரும் பணிகள் தீவிரம்
x

மடத்துக்குளம் பகுதியில் அமராவதி பிரதான கால்வாய் தூர் வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருப்பூர்

போடிப்பட்டி

மடத்துக்குளம் பகுதியில் அமராவதி பிரதான கால்வாய் தூர் வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மடைகளில் அடைப்பு

உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாக்களின் முக்கிய பாசன நீராதாரமாக அமராவதி பிரதான கால்வாய் உள்ளது. அமராவதி அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் 63 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த கால்வாய் மூலம் 25 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்களுக்கு நேரடியாக பலனளித்து வருகிறது. இதுதவிர நிலத்தடி நீராதாரத்தை உயர்த்துவதற்கு உதவுவதன் மூலம் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களின் பாசனத்துக்கு கைகொடுக்கிறது.

இந்தநிலையில் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாததால் பிரதான கால்வாயில் பல இடங்களில் சேதமடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. மேலும் கால்வாயின் கரையில் மட்டுமல்லாமல் கால்வாயின் உள்ளேயும் குப்பைகளை கொட்டும் போக்கு அதிகரித்து வருகிறது. இதனால் கால்வாயில் தேங்கும் குப்பைகள் மற்றும் பாலிதீன் கழிவுகள் நீர் திறப்பின்போது மடைகளில் அடைப்பை ஏற்படுத்துவதால் பெருமளவு நீர் வீணாகிறது. அத்துடன் கழிவுகளால் விளைநிலங்களும் வீணாகும் நிலை உள்ளது.மேலும் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் மண் குவியல் நிறைந்து பாசன நீர் செல்வதில் தடைகளை ஏற்படுத்துகிறது என்பன உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.

கடைமடை

இந்தநிலையில் மடத்துக்குளம் பகுதியில் பொக்லைன் எந்திரங்களின் உதவியுடன் அமராவதி பிரதான கால்வாயை தூர் வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பருவமழை கைகொடுக்காத நிலையில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் நிலைப்பயிர்களை காப்பாற்ற போராடும் நிலை உள்ளது.எனவே அமராவதி அணையிலிருந்து உயிர்த் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். அமராவதி அணையில் மொத்தமுள்ள 90 அடியில் தற்போது 64.87 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது குறைந்த அளவான இருப்பேயாகும்.

பிரதான கால்வாயில் திறக்கப்படும் தண்ணீர் வீணாகாமல் கடைமடை வரை உள்ள விவசாயிகளுக்கும் முழுமையாக போய் சேர வேண்டியது அவசியமாகும். இதனைக் கருத்தில் கொண்டு கால்வாய் தூர்வாரப்படுவது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.ஆனால் கிருஷ்ணாபுரம் முதல் துங்காவி வரையிலான குறைந்த தூரத்துக்கு மட்டுமே தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிகிறது. எனவே கால்வாயை முழுமையாக தூர்வாரவும், பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.



Next Story