கிணற்றை சுத்திகரித்து தூர்வாரும் பணி
சிவன்மலை ஊராட்சியில் சாக்கடை நீர் புகுந்த கிணற்றை சுத்திகரித்து தூர்வாரும் பணி
காங்கயம்
சிவன்மலை ஊராட்சியில் சாக்கடை நீர் புகுந்த கிணற்றை சுத்திகரித்து தூர்வாரும் பணி
காங்கயம் அடுத்து சிவன்மலை ஊராட்சி உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற முருகன் கோவில் வழிபாட்டு தலம் அமைந்துள்ளது. சிவன் மலையின் அடிவாரத்தில் சுமார்700 குடியிருப்புகளில் 2000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இங்கு வாழும் மக்களின் நீர்வள ஆதாரமாக மலை அடிவாரத்தில் பழைய கிணறு இருக்கிறது. காலப்போக்கில் மக்கள் தொகை அதிகரிப்பு, குடியிருப்புகள் அதிகரிப்புகளால் சிவன்மலை பகுதியில் உள்ள சாக்கடை நீர் இந்த கிணற்றுக்குள் தேங்க துவங்கியது. பின்னர் இந்த கிணற்று நீரை பொதுமக்கள் பயன்படுத்துவதை முற்றிலும் நிறுத்திவிட்டனர். இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் புதிதாக பொறுப்பேற்ற சிவன்மலை ஊராட்சி மன்ற தலைவர்.
துரைசாமி தலைமையில் தனியார் அமைப்பான துளிகள் அமைப்பின் ஒத்துழைப்புடன் கிணற்றுக்குள் சென்ற நீரை முற்றிலும் தடுத்து நிறுத்தினர். சுமார் 60 அடி ஆழமுள்ள அந்த கிணறு தற்போது 80 அடி ஆழமாக தூர்வாரும் திட்டத்தை தீட்டியுள்ளனர். மேலும் சுற்றுப்புற சுவர்கள் அமைக்க கனிம சுரங்கம் திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மூன்று அடுக்குகளாக பிரித்து கழிவுநீரானது வடிகட்டப்பட்டு அந்த நீரை 24 ஏக்கர் பரப்பளவில் 5000க்கும் மேற்பட்ட அழியும் தருவாயில் உள்ள அரியவகை மரங்கள் மற்றும் பனை விதைகள் நடவு செய்து அதில் சொட்டு நீர் பாசனத் தேவைக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது பயனில்லாமல் இருந்த கிணற்றை புதிப்பிக்க திட்டம் தீட்டி கிணற்றின் ஆழத்தை அதிகப்படுத்தியும் அந்த கிணற்றில் இருந்த சாக்கடை நீரை வெளியேற்றியும், சுற்றுப்புற சுவர்கள் அமைக்கவும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பின்னர் இந்த கிணற்று நீரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொட்டிகள் கட்டப்பட்டு சேகரிக்கும் நீரை அவ்வூர் மக்களுக்கு வழங்கப்படும் என சிவன்மலை ஊராட்சி தலைவர் துரைசாமி தெரிவித்தார்.