குளங்களில் வண்டல் மண்எடுக்க அனுமதிக்க வேண்டும்
குளங்களில் வண்டல் மண்எடுக்க அனுமதிக்க வேண்டும்
கோவை
கோவையில் குளங்களில் வண்டல் மண்எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.
குறைதீர்க்கும் கூட்டம்
கோவை தெற்கு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் ஆர்.டி.ஓ. பண்டாரிநாதன் தலைமை தாங்கி விவசாயிகளிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
இந்த கூட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கையை மனுவாக ஆர்.டி.ஓ.விடம் கொடுத்தனர். அத்துடன் சில விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள். அதன் விவரம் வருமாறு:-
காட்டுப்பன்றிகள்
சாதி, மதம், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் கந்தசாமி:-
கோவை மாவட்டத்தில் மலையடிவார பகுதியில் உள்ள விவசாயி நிலங்களுக்குள் தினமும் ஏராளமான காட்டுப்பன்றிகள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது. இந்தநிலையில் கோவை பனைமரத்தூரில் வேளாண் பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான விவசாய நிலத்தில் புகுந்து சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை சிலர் வேனில் வந்து பிடித்து செல்கிறார்கள். இந்த நிலம் வேளாண் பல்கலைக்கழகத்துக்கு சொந்தமானது என்பதால்தான் காட்டுப்பன்றிகள் பிடிக்கப்படுகிறதா? எனவே அதிகாரிகள் ஒருதலை பட்சமாக நடவடிக்கை எடுக்காமல் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி விவசாயிகளுக்கு தொல்லை கொடுத்து வரும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும்.
செங்கல் தட்டுப்பாடு
தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி:-
கோவை மாவட்டத்தில் பொதுமக்கள், விவசாயிகள் கட்டிடம் கட்ட செங்கல் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். தற்போது ஒரு செங்கல் ரூ.13-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதிக விலை கொடுத்து செங்கல் வாங்குவதால் பொதுமக்களுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. எனவே கோவையில் இயற்கைக்கு அழிவு ஏற்படுத்தாமல் விதிமுறைகளுக்கு உட்பட்டு கோவையில் செங்கல் சூளைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும்.
விவசாயிகள் சங்க துணைத்தலைவர் பி.ஆர்.பழனிசாமி:- கருமத்தம்பட்டி வளர்ந்து வரும் பகுதியாக இருக்கிறது. இங்கு இதுவரை பத்திரப்பதிவு அலுவலகம் இல்லை. இதனால் இந்த பகுதியை சேர்ந்தவர்கள் சூலூருக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது.எனவே கருமத்தம்பட்டியில் பத்திரப்பதிவு அலுவலகம் திறக்க வேண்டும்.
மண் எடுக்க அனுமதி
தமிழக விவசாயிகள் சங்க வட்டார தலைவர் ஆறுச்சாமி:- கோவையில் ஏராளமான குளங்கள் உள்ளன. இந்த குளங்களில் வண்டல் மண் அதிகமாக இருக்கிறது. அதை எடுத்து விவசாய நிலங்களுக்கு போட்டால் பயிர்களுக்கு சத்து அதிகமாக கிடைக்கும். எனவே குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்றார். இதுதவிர ஏராளமான கோரிக்கைகள் குறித்தும் விவசாயிகள் பேசினார்கள். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.