சிங்கம்புணரி சேவகபெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


சிங்கம்புணரி சேவகபெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 30 Jun 2023 12:30 AM IST (Updated: 30 Jun 2023 1:11 PM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரி சேவகபெருமாள் கோவிலில் திருவிழாவையொட்டி திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிவகங்கை

சிங்கம்புணரி

சிங்கம்புணரி சேவகபெருமாள் கோவிலில் திருவிழாவையொட்டி திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சேவகபெருமாள் கோவில்

சிங்கம்புணரியில் உள்ள சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட சேவகப்பெருமாள் அய்யனார் கோவிலில் சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. இதனால் வைகாசி மாதம் நடைபெறும் திருவிழா தற்போது மண்டல பூஜை நடைபெற்றதால் இந்த ஆண்டு ஆனி மாதத்தில் நடத்தப்படுகிறது.

அதன்படி கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 5-ம் நாளான நேற்று திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

திருக்கல்யாணம்

இந்த நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் சேவகப்பெருமாள், அய்யனார், பூரண, புஷ்கலா தேவியருடன் திருமணக்கோலத்தில் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து வேத மந்திரங்கள், செல்வமணி சிவாச்சாரியார் உள்ளிட்ட 11 சிவாச்சாரியார்கள் முழங்க, மூர்த்தி பூஜகர் உள்ளிட்ட 11 பூஜகர்கள், சிங்கம்புணரி கிராமத்தார்கள், நாட்டார்கள் முன்னிலையில் சேவகப்பெருமாள் அய்யனாருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

இதை தொடர்ந்து சுவாமி ஊஞ்சலில் வைத்து ஊஞ்சல் ஆடி உற்சவம் நடந்தது. திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருக்கல்யாண வைபவத்தில் பெண்கள் தங்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்ட மாங்கல்ய மஞ்சள் கயிற்றை மாற்றிக்கொண்டனர்.

தொடர்ந்து கோவில் முன்பு பிரமாண்டமான பந்தல் அமைத்து திருக்கல்யாணத்திற்கான விருந்து உபசரிப்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து 5-ம் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சுவாமி அனந்தசயனம் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

தேராேட்டம்

இன்று(வெள்ளிக்கிழமை) இரவு 6-ம் நாள் திருவிழாவான கழுவன் திருவிழா நடைபெறுகிறது. வருகின்ற 3-ந்தேதி திருத்தேரோட்டம் விழாவும் 4-ந்தேதி பூப்பல்லாக்கு உற்சவமும் நடைபெற்று திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் மற்றும் சிங்கம்புணரி கிராமத்தார்கள், நாட்டார்கள் செய்து வருகின்றனர்.


Next Story