பாடகி வாணி ஜெயராம் உடல் தகனம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி
30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடல் தகனம் செய்யப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
சென்னை,
10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி புகழ்பெற்ற பிரபல பின்னணி பாடகியாக விளங்கிய வாணி ஜெயராம் (வயது 78), சென்னை நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.
அவரது தலை, நெற்றி பகுதியில் ரத்த காயம் இருந்ததால் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். வாணி ஜெயராம் உடலை பிரேத பரிசோதனைக்கும் அனுப்பி வைத்தனர்.
படுக்கை அறையில் கால் தவறி விழுந்து, தலையில் அடிபட்டு இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பின்பே முழு விவரமும் தெரியவரும் என்று போலீசார் கூறி உள்ளனர்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி
வாணி ஜெயராம் உடல் பிரேத பரிசோதனை முடிந்து நுங்கம்பாக்கம் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதில் நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
வாணி ஜெயராம் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் பூச்சி முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
வாணி ஜெயராமின் இசை சேவையை போற்றும் வகையில் தமிழக அரசு சார்பில் போலீஸ் மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
புகழ் கொடி நாட்டியவர்
பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
முடிசூடா இசை வாணியாக விளங்கிக்கொண்டிருக்கிற வாணி ஜெயராம் மறைந்த செய்தி கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்.
தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது. வேலூர் மாவட்டத்திலே பிறந்து 19 மொழிகளில் பல்வேறு பாடல்களை பாடி, புகழ் கொடி நாட்டியவர் வாணி ஜெயராம்.
10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ஒரு மிகப்பெரிய சரித்திர சாதனை படைத்திருக்கிறார். அண்மையில்தான் அவருக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் விருதை பெறுவதற்கு முன்னரே எதிர்பாராத நிலையில் அவர் மறைந்திருக்கிறார். அவரது மறைவு செய்தி கேட்டு என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தை, அவரது குடும்பத்தாருக்கு குறிப்பாக திரையுலகுக்கு நான் மிகுந்த வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அண்ணாமலை
நுங்கம்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த வாணி ஜெயராம் உடலுக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை, இயக்குனர் பாண்டியராஜன், இசையமைப்பாளர்கள் இமான், ஸ்ரீகாந்த் தேவா உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.
30 குண்டுகள் முழங்க...
இதையடுத்து சென்னை பெசன்ட்நகர் மின் மயானத்தில் வாணி ஜெயராம் உடல் தகன ஏற்பாடுகள் நடந்தன. நேற்று மாலை வாணி ஜெயராம் உடல் அவரது இல்லத்தில் இருந்து ஊர்வலமாக பெசன்ட்நகர் மின் மயானத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு இறுதி சடங்குகள் நடந்தன.
மயான வளாகத்தில் வாணி ஜெயராமின் உறவினர்கள், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்திருந்தனர்.
பின்னர் தயாராக இருந்த 10 ஆயுதப்படை போலீசார் அணிவகுப்பு மரியாதை முடித்து, துப்பாக்கிகளில் 3 ரவுண்டுகளாக 30 குண்டுகளை வான் நோக்கி சுட்டு வாணி ஜெயராம் உடலுக்கு அரசு மரியாதையை செலுத்தினர். பின்னர் உடல் தகனம் நடந்தது. அப்போது அங்கு நின்ற உறவினர்களும், ரசிகர்களும் கண்ணீர் விட்டனர்.