ஒற்றை தலைமை விவகாரம்: ஓ.பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்தும் முயற்சியில் மூத்த நிர்வாகிகள் தீவிரம்


ஒற்றை தலைமை விவகாரம்: ஓ.பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்தும் முயற்சியில் மூத்த நிர்வாகிகள் தீவிரம்
x

அ.தி.மு.க.வில் விஸ்வரூபம் எடுத்திருக்கும் ஒற்றை தலைமை விவகாரத்தில் அதிருப்தியில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்தும் முயற்சியில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சென்னை,

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்திருக்கும் நிலையில், அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் தினமும் ஆதரவாளர்களை சந்தித்து இதுதொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் தனது இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்தார். 'பொதுச்செயலாளர் பதவிக்கு வேறு ஒருவரை கொண்டுவரக்கூடாது. அது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம். அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை கூடாது. கட்சியில் விரைவில் உயர்மட்டக்குழு அமைக்கப்பட வேண்டும். கட்சி கூட்டத்தில் பேசியவற்றை வெளியே அறிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்', என்று கூறி பரபரப்பு ஏற்படுத்தினார்.

ஆதரவாளர்களுடன் ஆலோசனை

இந்தநிலையில் 4-வது நாளாக நேற்றும் தனது இல்லத்தில் ஆதரவாளர்களை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம், அமைப்பு செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர், பி.எச்.மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. மைத்ரேயன் ஆகியோர் பங்கேற்றனர்.

இதற்கிடையில் அ.தி.மு.க. எம்.பி. மு.தம்பிதுரை நேற்று ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நீடித்தது. அதனைத்தொடர்ந்து அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை, சேலத்தில் நேற்று முன்தினம் மு.தம்பிதுரை எம்.பி. சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பு குறித்து அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:-

தம்பிதுரை சந்திப்பு

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை, தம்பிதுரை எம்.பி. சந்தித்து பேசினார். ஒற்றை தலைமை பிரச்சினையால் கட்சியின் 2-ம் கட்ட தலைவர்கள், தொண்டர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

இதை எப்படி சுமுக நிலைக்கு கொண்டு செல்வது? மீண்டும் ஆட்சி அமைக்கக்கூடிய அளவில் கட்சியை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. தம்பிதுரையிடம், சில கருத்துகளை ஓ.பன்னீர்செல்வம் கூறினார். இந்த கருத்துகளை எடப்பாடி பழனிசாமியிடம் சொல்கிறேன் என்று அவர் தம்பிதுரை தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமியை சந்திக்கும் வாய்ப்பு வந்தால் நிச்சயம் சந்தித்து பேசுவேன். எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து கையெழுத்திட்டு நிர்வாகிகளுக்கு பொதுக்குழு கூட்டத்துக்கான அழைப்பு விடுத்திருக்கிறார்கள். இடையில் சில பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக பேசிக்கொண்டு இருக்கிறோம்.

பொதுக்குழு கூட்டத்தில்...

பொதுக்குழுவில் எந்த ஒரு தீர்மானம் நிறைவேற்றுவது என்றாலும் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து கையெழுத்திட்டால் தான் முடியும். தானாக எந்த தீர்மானத்தையும் நிறைவேற்ற முடியாது. அப்படி ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தாலும் அது செல்லாது. அடிமட்ட தொண்டர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருங்கிணைப்பாளரையும், இணை ஒருங்கிணைப்பாளரையும் தேர்வு செய்திருக்கிறார்கள்.

எனவே இந்த பதவிகளை பொதுக்குழுவில் வைத்து ரத்து செய்யமுடியாது. தலைமை இறந்து போனால் தான் தற்காலிகமாக பொதுக்குழுவில் கொண்டுவர முடியும். எனவே எந்த தீர்மானத்தையும் யாரும் தனியாக கொண்டு வந்து விட முடியாது. அப்படி செய்தால் அது கட்சியை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஒற்றை தலைவலியாக...

இந்தநிலையில் ஓ.பன்னீர்செல்வம், தனது இல்லத்தில் நேற்று இரவும் தனது ஆதரவாளார்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஒற்றை தலைமை கூடாது என்று ஒருபுறம் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக இருக்கிறார். அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அவர் இந்த முறை எதையும் விட்டுக்கொடுக்க மாட்டார் என அவரது ஆதரவாளர்கள் உறுதிபட தெரிவிக்கிறார்கள். இன்னொருபுறம் ஒற்றை தலைமை கட்டாயம் தேவை என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கொடிபிடித்து வருகிறார்கள். அ.தி.மு.க.வில் ஒற்றை தலைவலியாக குடைந்து வரும் ஒற்றை தலைமை விவகாரம் தினந்தோறும் அரசியல் களத்தை பரபரப்பாக்கி வருகிறது.

கட்சியின் இரு தலைவர்களும் எதிரெதிர் துருவங்களாக மாறியிருக்கும் இந்த சூழலில் திட்டமிட்டப்படி பொதுக்குழு நடக்குமா? அப்படி நடந்தாலும் பொதுக்குழுவில் என்ன முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறதோ? என்று அ.தி.மு.க. தொண்டர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அ.தி.மு.க.வில் நடைபெறும் அடுத்தடுத்த நிகழ்வுகளை இதர அரசியல் கட்சிகளும் ஆர்வமாக உற்றுநோக்கி வருகின்றன.


Next Story