கங்கை அம்மன் கோவிலில் சிரசு விழா
கலவை கங்கை அம்மன் கோவிலில் சிரசு விழா நடைபெற்றது.
கலவை மந்தவெளியில் அமைந்துள்ள கங்கை அம்மன் கோவிலில் 18-ம் ஆண்டு சிரசுவிழா 3 நாள் நடைபெற்றது. விழாவையொட்டி முதல் நாளில் கங்கை அம்மன் ஊஞ்சலில் புஷ்ப அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இரண்டாம் நாள் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். கூழ் ஊற்றுதல், அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. கடைசி நாள் அன்று சிரசு ஊர்வலம் நடந்தது. காலை 10 மணிக்கு ஊர்வலம் தொடங்கி கலவை நகர வீதியில் ஊர்வலமாக நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்களுடன் செண்டை மேளம், நாதஸ்வர கச்சேரியுடன் சிரசு ஊர்வலம் நடைபெற்றது. வழிநெடுகிலும் பக்தர்களுக்கு குளிர்பானம், மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் நேர்த்தி கடனாக அந்தரத்தில் பறந்து சென்று கங்கை அம்மனுக்கு மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் கலவை அங்காளம்மன் கோவில் சந்தானம் சாமி, கமலக்கண்ணி கோவில் சச்சிதானந்த அய்யப்ப குருசாமி, தட்சிணாமூர்த்தி, விநாயகம் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.