சிறுகனூர் போலீஸ் நிலையம் முற்றுகை
சிறுகனூர் போலீஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டது.
சமயபுரம்:
சிறுகனூர் அருகே உள்ள அழுந்தலைப்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் ரங்கசாமி, பெருமாள். உறவினர்களான இவர்கள் 2 பேரும் செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தனர். இதில் ரங்கசாமிக்கு சொந்தமான 110 ஆடுகளையும், பெருமாளுக்கு சொந்தமான 65 ஆடுகளையும் அந்த கிராமத்தின் அருகில் உள்ள வயல் பகுதியில் பட்டி அமைத்து வளர்த்து வந்தனர். இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 9-ந் தேதி இரவு அங்கு வந்த மர்ம நபர்கள் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 175 ஆடுகளையும் திருடி சென்றனர். இது குறித்து 2 பேரும் அளித்த புகாரின்பேரில் சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆடுகளை திருடி சென்றவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு 10 ஆடுகளை மட்டும் மீட்டு உரிமையாளரிடம் போலீசார் ஒப்படைத்துள்ளனர். மற்ற ஆடுகள் குறித்த கேட்ட 2 பேரையும், போலீசார் அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ரெங்கசாமி, பெருமாள் மற்றும் அவரது உறவினர்கள், ஆடு திருடியவர்களை கைது செய்யாததை கண்டித்து சிறுகனூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, சிறுகனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி, ஆடுகளை திருடிய நபர்களை உடனடியாக கைது செய்யாதது ஏன் என்றும், ஆடு திருடியவர் இருக்கும் இடத்தை இன்ஸ்பெக்டரிடம் கூறியும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்றும், லால்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் தனிப்படை அமைத்து ஆடு திருடர்களை உடனடியாக கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். இதற்குரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்கத்தின் அழுந்தலைப்பூர் கிளையின் சார்பில் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.