கூண்டுகளில் நாய், மாட்டு இறைச்சி வைத்து கண்காணிப்பு


கூண்டுகளில் நாய், மாட்டு இறைச்சி வைத்து கண்காணிப்பு
x
திருப்பூர்


ஊதியூர் வனப்பகுதியில் பதுங்கி இருக்கும் சிறுத்தையை பிடிக்க கூண்டுகளில் நாய் மற்றும் மாட்டு இறைச்சி வைத்து வனத்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர்.

சிறுத்தை

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஊதியூர் வனப்பகுதிக்கு வந்த ஒரு சிறுத்தை பதுங்கி மலையடிவாரப் பகுதியில் உள்ள தோட்டங்களுக்கு புகுந்து அங்கிருந்த ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வந்தது. இதையடுத்து காங்கயம் வனத்துறையினர் ஊதியூர் மலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக எச்சரிக்கை பதாகைகள் பல்வேறு இடங்களில் வைத்து சிறுத்தையை கண்காணித்து வந்தனர். மேலும் வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்கள், கூண்டுகள், ட்ரோன்கள் கேமராக்கள் உள்ளிட்டவைகளை வைத்தும் தீவிரமாக தேடி வந்தனர்.

ஆனால் சிறுத்தை போக்கு காட்டும் விதமாக கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகாமலும், கூண்டுகளில் சிக்காமலும், வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்தது. இந்தநிலையில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சிறுத்தையை பார்த்ததாக தகவல் தெரிவித்து வந்தனர். தகவல் தெரிவித்த இடங்களுக்கு சென்ற வனத்துறையினர் சிறுத்தையின் கால் தடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கூண்டுக்குள் நாய், மாட்டு இறைச்சி

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மலையடிவார பகுதியில் கடந்த 30 நாட்களுக்கு பின் சிறுத்தை மீண்டும் தன் வேட்டையை தொடங்கியது. ஊதியூர் - காசிலிங்கம் பாளையம் சாலை பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் கட்டியிருந்த நாயை சிறுத்தை தூக்கி சென்றது. நாய் கட்டியிருந்த இடத்தில் சிறுத்தையின் கால்தடங்கள் பதிவாகி இருந்தது. இதையடுத்து ஊதியூர் வனப்பகுதியில் இன்னும் சிறுத்தை பதுங்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து நேற்று வனப்பகுதிகளில் ஏற்கனவே வைக்கப்பட்டுள்ள 4 கூண்டுகளை தயார் படுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். அதன்படி கூண்டுக்குள் மாட்டு இறைச்சி மற்றும் உயிருடன் நாயை பாதுகாப்பான முறையில் வைத்து சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் ரோந்து பணியில் ஈடுபட்டு சிறுத்தை நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகின்றனர்.


Next Story