சிறுவாணி அணை நீர்மட்டம் 3 அடியாக குறைந்தது


சிறுவாணி அணை நீர்மட்டம் 3 அடியாக குறைந்தது
x
தினத்தந்தி 1 Jun 2023 4:00 AM IST (Updated: 1 Jun 2023 4:00 AM IST)
t-max-icont-min-icon

கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 3 அடியாக குறைந்தது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

கோயம்புத்தூர்

கோவை

கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 3 அடியாக குறைந்தது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

சிறுவாணி அணை

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதியில் சிறுவாணி அணை உள்ளது. 50 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் இருந்து கோவை மாநகர பகுதிக்கு குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக அணையின் ஒரு பகுதியில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு அதல் இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது.

கடந்த ஒருசில ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் பெய்த பலத்த மழை காரணமாக கடும் சேதம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அங்கு உள்ள அணைகளில் முழு கொள்ளளவுக்கு தண்ணீரை தேக்க கேரள அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனால் 42 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.

நீர்மட்டம் குறைவு

கடந்த ஆண்டு அணையின் நீர்மட்டம் 40 அடிக்கும் மேல் இருந்ததால் தினமும் 10 கோடி லிட்டருக்கு மேல் தண்ணீர் எடுக்கப்பட்டு வினிேயாகம் செய்யப்பட்டது.

இந்த நிலையல் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் குறைந்தது. இதனால் அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் கோவை மாநகர பகுதியில் மழை பெய்த போதிலும் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை.

3 அடியாக சரிந்தது

இதனால் அணையில் இருந்து தண்ணீர் வேகமாக குறைந்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையில் 3.18 அடிக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து குடிநீருக்காக 3 கோடியே 60 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டது. அதில் 3 கோடியே 20 லட்சம் லிட்டர் கோவை மாநகர பகுதிக்கு வழங்கப்பட்டது.

கடந்த சில நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யவில்லை. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் கோவை மாநகர பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பருவமழை

இதுகுறித்து குடிநீர் பிரிவு அதிகாரிகள் கூறும்போது, கேரளாவில் இந்த மாதம் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மழை தொடங்கிவிட்டால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துவிடும். தற்போது அணையில் இருக்கும் தண்ணீரை வைத்து 15 நாட்களுக்கு மட்டுமே குடிநீர் வழங்க முடியும். எனவே தென்மேற்கு பருவமழையை எதிர்நோக்கி இருக்கிறோம் என்றனர்.


Next Story