சிறுவாணி அணை நீர்மட்டம் 13½ அடியாக உயர்வு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 13½ அடியாக உயர்ந்துள்ளது. இதனால் குடிநீருக்கு எடுக்கப்படும் தண்ணீர் அளவும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
கோவை
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 13½ அடியாக உயர்ந்துள்ளது. இதனால் குடிநீருக்கு எடுக்கப்படும் தண்ணீர் அளவும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
குடிநீர் திட்டங்கள்
கோவை மாநகரில் உள்ள 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய சிறுவாணி, பில்லூர் 1, 2 மற்றும் வடவள்ளி, ஆழியாறு ஆகிய கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவிற்கு பெய்யவில்லை. இதனால் நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து குறைவாக உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் அடிவார பகுதிகளில் ஓரளவு மழை பெய்து வருகிறது. இந்த மழையால் நேற்று முன்தினம் கோவை குற்றாலத்தில் திடீர் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. இதனால் கோவை குற்றலாத்திற்கு பொதுமக்களை அனுமதிக்காமல் வனத்துறையினர் நிறுத்தி வைத்து உள்ளனர்.
அணை நீர்மட்டம் உயர்வு
இதேபோல் சிறுவாணி அணை நீர்பிடிப்பு பகுதி மற்றும் அடிவார பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் 50 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 13.5 அடியாக உயர்ந்து உள்ளது. இதனால் கோவை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழை இன்னும் நீடித்தால் அணை நீர்மட்டம் வெகுவாக உயர வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:- கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நிலவிய கடும் வெயில் காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. மே மாத இறுதியில் பருவமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் வரை பருவமழை பெய்யாமல் ஏமாற்றியது. இதனால் அணையின் நீர்மட்டம் 1 அடியாக குறைந்தது. இதையடுத்து அணையில் இருந்து குடிநீருக்கு எடுக்கப்படும் அளவு 48 எம்.எல்.டி.யாக குறைக்கப்பட்டது.
குடிநீர் எடுக்கும் அளவு அதிகரிப்பு
இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஓரளவு மழை பெய்து வருகிறது. நேற்று சிறுவாணி அணைப்பகுதியில் 63 மி.மீ. அளவிற்கும், அடிவார பகுதியில் 37 மி.மீ. அளவிற்கும் மழை பெய்தது. இதனால் தற்போது அணையின் நீர்மட்டம் 13.5 அடியாக உயர்ந்து உள்ளது.
இதையடுத்து கோவை மக்களின் குடிநீர் தேவைக்காக தினந்தோறும் எடுக்கப்படும் தண்ணீரில் அளவு 48 எம்.எல்.டி.யில் இருந்து 68 எம்.எல்.டி.யாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில வாரங்கள் மழை நீடித்தால் விரைவில் 25 அடியை தாண்டும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.