சிறுவாணி அணையின் நீர்மட்டம் 23 அடியாக உயர்வு


சிறுவாணி அணையின் நீர்மட்டம் 23 அடியாக உயர்வு
x

சிறுவாணி அணையின் நீர்மட்டம் 23 அடியாக உயர்வு

கோயம்புத்தூர்

கோவை, ஜூலை

தொடர்மழை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 23 அடியாக உயர்ந்து உள்ளது.

சிறுவாணி அணை

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதியில் சிறுவாணி அணை உள்ளது. 50 அடி உயரம் கொண்ட இந்த அணையில் இருந்து கோவைக்கு தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால் நீர்மட்டம் 15 அடிக்கும் குறைவானது. இதற்கிடையே கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதனால் படிப்படியாக அணையின் நீர்மட்டம் உயர தொடங்கியது. நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 20 அடியை தாண்டியது.

23 அடியாக உயர்வு

இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு முழுவதும் தொடர்ந்து அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைபெய்தது. இதனால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து 23 அடியாக உயர்ந்தது. இதன் காரணமாக அணையில் இருந்து 10 கோடி லிட்டர் குடிநீருக்காக எடுக்கப்பட்டு வருகிறது.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் 73 மி.மீட்டர் மழையும், அடிவார பகுதியில் 29 மி.மீட்டர் மழையும் பதிவாகி இருந்தது. தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால், அணைக்கு வரும் தண்ணீரின் அளவை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

அனுமதி மறுப்பு

அதுபோன்று கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்றும் மழை பெய்தது. இதனால் கோவை குற்றால அருவியில் தண்ணீர் அதிகளவில் வந்ததால் நேற்று சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதற்காக அடிவாரத்தில் உள்ள சாடிவயல் சோதனை சாவடியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதுபோன்று சோதனை சாவடி அருகே உள்ள சாடியாற்றில் தண்ணீர் அதிகளவில் செல்கிறது. இதனால் இங்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் அந்த ஆற்றுக்குள் இறங்குவதை தடுக்கவும் வனத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள். அத்துடன் நொய்யல் ஆற்றில் தண்ணீர் சென்று வருவதால் யாரும் ஆற்றில் இறங்கி குளிக்கவோ அல்லது ஆற்றை கடக்க முயற்சி செய்யவோ வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

----


Next Story