சிறுவாணி அணை நீர்மட்டம் 44 அடியாக உயர்வு


சிறுவாணி அணை நீர்மட்டம் 44 அடியாக உயர்வு
x

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 44 அடியாக உயர்ந்து உள்ளது.

கோயம்புத்தூர்

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 44 அடியாக உயர்ந்து உள்ளது.

சிறுவாணி அணை

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதியில் சிறுவாணி அணை உள்ளது. 50 அடி உயரம் கொண்ட இந்த அணையில் இருந்து கோவை மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுக ளுக்கு முன்பு கேரளாவில் பெய்த கனமழை காரணமாக கடும் பாதிப்பு ஏற்பட்டது.

எனவே அங்குள்ள அணைகளில் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்குவது இல்லை. அது போல் சிறுவாணி அணையிலும் முழு கொள்ளளவுக்கு தண்ணீர் தேக்கப்படுவது இல்லை.

நீர்மட்டம் 45 அடியை தாண்டினாலே அதிகாரிகள் அணையில் இருந்து தண்ணீரை ஆற்றில் திறந்து விட்டு வருகிறார்கள். இதற்கு தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

44 அடியாக உயர்வு

இந்த நிலையில் தற்போது அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சிறுவாணி அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து வருகிறது. அதன்படி சிறுவாணி அணையின் நீர்மட்டம் 44 அடியாக உயர்ந்து உள்ளது.

அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் நேற்று 30 மில்லி மீட்டர் மழையும், அடிவாரத்தில் 7 மி.மீ. மழையும் பதிவானது. அணையில் இருந்து குடிநீருக்காக 10 கோடியே 6 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அணைக்கு வரும் தண்ணீரின் அளவை தமிழக-கேரள அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

முழு கொள்ளளவு

சிறுவாணி அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டினால் தான் கோவை பகுதி மக்களுக்கு ஆண்டு முழுவதும் தடையில்லாமல் குடிநீர் வழங்க முடியும். ஆனால் அணையின் நீர்மட்டம் 45 அடியை தாண்டியதும் தண்ணீரை ஆற்றில் திறந்து விடுவதை கேரள அதிகாரிகள் வழக்கமாக வைத்து உள்ளனர்.

இந்த அணை அடர்ந்த வனப்பகுதியில் இருப்பதால் முழு கொள்ளளவான 50 அடி வரை தண்ணீரை தேக்க வேண்டும். அதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story