மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் உள்ளிருப்பு போராட்டம்

மின் துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மின் துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உள்ளிருப்பு போராட்டம்
மின் துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், தனியார் மயமாக்கும் முடிவினை கைவிடகோரியும் திருவாரூரில் உள்ள மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு அனைத்து தொழிற் சங்க கூட்டமைப்பு சார்பில் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு தொ.மு.ச. திட்ட செயலாளர் ஜான்பிரிட்டோ தலைமை தாங்கினார்.
இதில் சி.ஐ.டி.யூ. திட்ட செயலாளர் ராஜேந்திரன், அண்ணா தொழிற் சங்க திட்ட தலைவர் முருகானந்தம், எம்பிளாய் பெடரேஷன் திட்ட செயலாளர் முருகஅருள், பொறியாளர் கழக திட்ட செயலாளர் ராஜா, ஐக்கிய சங்க திட்ட செயலாளர் செந்தில், பொறியாளர் சங்க திட்ட பொருளாளர் தர்பாரண்யம், கணக்காயர் கள தொழிலாளர் சங்க திட்ட செயலாளர் தனசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டு மின்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
திருமக்கோட்டை
திருமக்கோட்டையில் மின்வாரிய தொழிற்சங்க கூட்டு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க திட்ட தலைவர் சேகர் தலைமை தாங்கினார். உதவி மின் பொறியாளர் ராமச்சந்திரன், என்ஜினீயர் சங்கத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க கூட்டுக்குழு, அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் திருமக்கோட்டை மின் உற்பத்தி நிலையத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது.
மன்னார்குடி
மன்னார்குடியில் பூக்கொல்லை ரோட்டில் உள்ள மின் வாரிய அலுவலகம் முன்பு தொ.மு.ச. கோட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. எம்பிளாயீஸ் சம்மேளன திட்ட செயல் தலைவர் ராஜகோபால் முன்னிலை வகித்தார்.
மின் வாரிய பொறியாளர் சங்க தஞ்சை மண்டல செயலாளரும், அனைத்து இந்திய மின் வாரிய பட்டயப் பொறியாளர்கள் சம்மேளன தென் மண்டல தலைவருமான சா.சம்பத் பேசினார்.
இதில் பொறியாளர் சங்க பொதுக்குழு உறுப்பினர் கண்ணன், சம்மேளன கோட்ட தலைவர் ராஜேந்திரன், சி.ஐ.டி. யூ கோட்ட தலைவர் மோகன சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
நீடாமங்கலத்தில் கொரடாச்சேரி, கோவில்வெண்ணி துணை மின் நிலைய அலுவலர்கள், ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி துணை மின் நிலையம் முன்பு சி.ஐ.டி.யூ. தலைவர் வீரபாண்டியன் தலைமையில் மின்வாரிய ஊழியர்கள், பொறியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.






