!-- afp header code starts here -->

மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 3 டி அனிமேஷன் மேப்பிங் திட்டத்துக்கு இடம் ஆய்வு


மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 3 டி அனிமேஷன் மேப்பிங் திட்டத்துக்கு இடம் ஆய்வு
x

மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 3 டி அனிமேஷன் மேப்பிங் திட்டத்துக்கு இடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

செங்கல்பட்டு

3 டி அனிமேஷன் திட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்கள் செதுக்கிய சின்னங்கள் இன்றளவும் கம்பீரமாக நின்று பயணிகளுக்கு காட்சி தருகிறது. இங்குள்ள, புராதன சின்னங்களை கண்டு ரசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

மேலும், இங்கு வரும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் 3 டி அனிமேஷன் திட்டத்தை செயல்படுத்த ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெண்ணெய் உருண்டை பாறை, அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோவில் உள்ளிட்ட புராதன சின்னங்களை தனியார் நிறுவன ஊழியர்கள் தொல்லியல் துறையிடம் அனுமதி கடிதம் பெற்று 360 டிகிரி சுழலும் கேமராவில் 3 டி வீடியோ பதிவு செய்தனர்.

ஆய்வு

இந்த நிலையில், தலசயன பெருமாள் கோவில் வளாகத்தில் 3 டி அனிமேஷன் திட்டத்துக்காக மின்சார அறை, நுழைவு கட்டண அறை, வரவேற்பு அரங்கம் மற்றும் புல்வெளி தரை அமைக்க நேற்று சுற்றுலாத்துறை என்ஜினீயர் ஒருவர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, இந்து சமய அறநிலைய துறை காஞ்சீபுரம் இணை ஆணையர் வான்மதி, செங்கல்பட்டு உதவி ஆணையர் லட்சுமிகாந்த பாரதிதாசன், கோவில் செயல் அலுவலர் சரவணன், கோவில் மேலாளர் சந்தானம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரி ஒருவர் கூறுகையில்:-

மாமல்லபுரத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் 3 டி அனிமேஷன் திட்டத்துக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, புராதன சின்னங்களை 3 டி வீடியோ எடுத்துள்ளோம். அந்த வீடியோவை டெல்லியில் உள்ள ஒன்றிய தொல்லியல் துறை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறையிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன் சினிமா தியேட்டரில் பார்ப்பது போன்று புரோஜக்டர் மூலம் 3 டி வீடியோ 30 நிமிடங்கள் போட்டு காட்டி புராதன சின்னங்கள் எந்த காலத்தில், எந்த மன்னரால் உருவாக்கப்பட்டது என்பது குறித்து, பயணிகளுக்கு தெளிவாக விளக்கி கூற திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக, வரவேற்பு அரங்கம், மின்சார அறை, நுழைவு கட்டண அறை, புல் தரை அமைக்க ஆய்வு செய்துள்ளோம்.

இவை அனைத்தும் மேற்கொள்ள 9 ஆயிரத்து 100 சதுர அடி தேவைப்படுகிறது. விரைவில், இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த திட்டம் சுற்றுலா பயணிகள் மத்தியில் வரவேற்பை பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story