சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கண்மாய்களுக்கு வைகை அணையில் தண்ணீர் திறப்பு


சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கண்மாய்களுக்கு   வைகை அணையில் தண்ணீர் திறப்பு
x

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கண்மாய்களுக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் 5 மாவட்ட கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேனி

வைகை அணை

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. அணையின் நீர்மட்டம் தற்போது 70 அடியாக உள்ளது. இந்த நிலையில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட வைகை அணை பூர்வீக பாசன பகுதி 1,2,3-ஐ சேர்ந்த விவசாயிகள், அந்த பகுதியில் உள்ள கண்மாய்களில் தண்ணீரை பெருக்கி வைக்கும் வகையில் அணையில் இருந்து தண்ணீர் திறக்கும்படி கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து அவர்களின் கோரிக்ைகயை ஏற்று வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி இன்று காலை முதல் வருகிற 11-ந்தேதி வரை 3 கட்டமாக அணையில் இருந்து தண்ணீர் திறக்க அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து இன்று வைகை அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் அணையில் உள்ள 7 பிரதான மதகுகள் வழியாக சீறிப்பாய்ந்து செல்கிறது.

தண்ணீர் திறப்பு

இந்த தண்ணீரின் மூலம் வைகை அணை பூர்வீக பகுதிகளான ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் உள்ள பார்த்திபனூர் பெரிய கண்மாய், ஏனாதி கோட்டை கண்மாய், சூடியூர் கண்மாய், மரிச்சுகட்டி கண்மாய், சொட்டதட்டி கண்மாய், சிலைமான் கண்மாய், கொந்தகை கண்மாய் உள்ளிட்ட 91 கண்மாய்களில் நீரை பெருக்க முடியும். 3 மாவட்ட கண்மாய்களுக்கு வைகை அணையில் இருந்து 3 கட்டமாக மொத்தம் 1,377 மில்லியன் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட உள்ளது.

அணையில் இருந்து ஆற்றுப்படுகை வழியாக தண்ணீர் திறக்கப்படுவதால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் வைகை ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இன்று காலை 6 மணி நிலவரப்படி வைகை அணை நீர்மட்டம் 70.13 அடியாக இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 1,191 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கண்மாய்கள் மற்றும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2,769 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.


Next Story