சிவகாசி பட்டாசு ஆலை விபத்து - 3 பேர் கைது


சிவகாசி பட்டாசு ஆலை விபத்து - 3 பேர் கைது
x
தினத்தந்தி 18 Oct 2023 10:27 AM IST (Updated: 18 Oct 2023 10:37 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக உரிமையாளர் சுந்தரமூர்த்தி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்,

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில வாரங்களே இருப்பதால் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பட்டாசு ஆலைகளில் பட்டாசு உற்பத்தி மும்முரமாக நடந்து வருகிறது.

சிவகாசி கங்காகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் சுந்தரமூர்த்தி (வயது 43). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ரெங்கப்பாளையம் கிராமத்தில் இயங்கி வருகிறது.

இந்த பட்டாசு ஆலையையொட்டி பட்டாசு கடையும், பட்டாசு சேமிப்பு கிடங்கும் இயங்கி வந்தன. அந்த கடைக்கு பின்புறமாக அமைத்து இருந்த 3 அறைகளில் கடைக்கு விற்பனைக்காக பட்டாசு 'கிப்ட் பாக்ஸ்'களை தயார் செய்யும் பணியில் பெண்கள் ஈடுபட்டு வந்தனர். இந்த பணியில் 3 அறைகளிலும் நேற்று மதியம் பெண்கள் மும்முரமாக இருந்தனர்.

அந்த நேரத்தில் வெளிப்புறமாக இருந்த கடைக்கு பட்டாசுகள் வாங்க வெளியூரில் இருந்து சிலர் வந்திருந்தனர். அவர்கள் புதிய வகை பட்டாசுகளை தேர்வு செய்தனர்.

அதில் சில பட்டாசுகளை எடுத்து கடையின் வெளியே வைத்து வெடித்து விபரீத செயலில் ஈடுபட்டதாக தெரியவருகிறது. அப்போது, அதில் ஒரு பட்டாசு வெடித்து கடைக்குள் விழுந்ததாகவும், உடனே கடையில் இருந்த பட்டாசுகளில் தீப்பொறி பட்டு வெடித்துச்சிதற தொடங்கியதாகவும் தெரியவருகிறது.

கடையின் பின்புறம் அமர்ந்து பட்டாசு கிப்ட் பாக்ஸ் செய்துகொண்டிருந்த பெண்களுக்கு என்ன நடக்கிறது என்பது தெரிவதற்குள், அங்கு பட்டாசுகள் வெடித்துச்சிதறி புகை மண்டலமாக மாறியது. தொடர்ந்து பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் சிதறிய வண்ணமாக இருந்ததால் யாராலும் அருகில் நெருங்க முடியவில்லை. கடையின் உள்ளே இருந்தும் பெண்களால் வெளியே வர முடியாமல் அலறினர். சற்று நேரத்தில் ஒருவர்பின் ஒருவராக உடல்கருகி பலியான கொடுமை அரங்கேறியது.

இதற்கிடையே வெடிவிபத்து பற்றி அறிந்ததும் எம்.புதுப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

சிவகாசி தீயணைப்பு படை வாகனங்கள் சற்று நேரத்தில் வந்தன. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கு கண்ட காட்சி போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது. பலியானவர்கள் உடல்கள் ஆங்காங்கே கருகி கிடந்தன. அவற்றை மீட்டு உடனடியாக பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

பெண்கள் உள்பட மொத்தம் 13 பேரின் உடல்கள் அங்கிருந்து மீட்கப்பட்டன. அவற்றை அடையாளம் காண்பதற்காக அந்த பட்டாசு கடைக்கு பணிக்கு வந்தவர்கள், கிப்ட் பாக்ஸ் செய்யும் பணிக்கு வந்த பெண்கள் யார்-யார்? என்ற விவரங்களை சேகரித்து போலீசார் விசாரணையை தொடங்கினர்.

அதன்பின்னர், பலியான 13 பேரின் பெயர்கள் விவரமும் தெரியவந்தது. அது வருமாறு:-

1. வடக்கு அழகாபுரி இந்திராநகரை சேர்ந்த ஸ்ரீசீனிராஜ் என்பவருடைய மனைவி மகாதேவி (வயது50)

2. வடக்கு அழகாபுரி நாகராஜ் மனைவி பஞ்சவர்ணம் (35)

3. இதே பகுதியை சேர்ந்த தாளமுத்து மனைவி தமிழ்ச்செல்வி (55)

4. மூவரை வென்றானைச் சேர்ந்த குருக்கலாஞ்சி மனைவி முத்துலட்சுமி (36).

5. எஸ்.அம்மாபட்டியைச் சேர்ந்த முனீசுவரி (32)

6. அழகாபுரி மகேந்திரன் மகள் தங்கமலை.

7. காந்தி நகர் முனியப்பன் மனைவி அனிதா (40).

8. லட்சுமியாபுரம் ஜெயமுருகன் மனைவி பாக்கியலட்சுமி (35).

9. இதே பகுதியை சேர்ந்த சுப்புக்கனி மனைவி குருவம்மாள் (55)

10. அம்மாபட்டி காளிராஜன் மனைவி லட்சுமி (28).

11. லட்சுமியாபுரத்தை சேர்ந்த முருகானந்தம் மனைவி இந்திரா (50).

12. மூவரை வென்றான் கிராமத்தை சேர்ந்த முனியாண்டி மனைவி செல்லம்மாள் (40)

13.வடக்கு அழகாபுரி முத்து ராஜ் மகன் பாலமுருகன் (30)

இந்த சம்பவத்தில் சங்கர் என்பவருடைய மனைவி சின்னத்தாய் (35), ஆறுமுகம் மனைவி பொன்னுத்தாய் (45) ஆகியோர் தீக்காயத்துடன் உயிர் தப்பினர்.

வெடி விபத்து நடந்த இடத்தை விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன், மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. ரம்யா பாரதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு, மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.

இந்த வெடி விபத்து குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் பட்டாசு ஆலையின் உரிமையாளர் சுந்தரமூர்த்தி, மேலாளர் ராம்குமார், போர்மேன் கனகராஜ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story